சித்ரதுர்கா : ”அனைத்து கட்சி ஆட்சி காலத்திலும் திருடர்கள் இருந்தனர். தற்போது திருடர்களை கண்டுப்பிடிக்கும் பணியை, எங்கள் அரசு செய்கிறது. ஊழலைப்பற்றி மாநில காங்., தலைவர் சிவகுமார் பேசுவது, பூதத்தின் வாயால் பகவத்கீதை கேட்பது போன்றுள்ளது,” என விவசாயத்துறை அமைச்சர் பி.சி.பாட்டீல் தெரிவித்தார்.
சித்ரதுர்கா ஹிரியூரின், எல்லதகரே கிராம பஞ்சாயத்தில், 18 கோடி ரூபாய் செலவில் புதிதாக கட்டியுள்ள மொரார்ஜி தேசாய் உறைவிடப்பள்ளி துவக்க நிகழ்ச்சி, நேற்று நடந்தது. அமைச்சர் பி.சி.பாட்டீல் பங்கேற்றார்.பின் அவர் கூறியதாவது:சட்டசபை தேர்தலுக்கு, பா.ஜ., பயப்படவில்லை. மத்தியில், மாநிலத்தில் பா.ஜ., அரசு உள்ளது.
அரசுகளின் அபிவிருத்தி பணிகளை பார்த்து, கட்சியில் சேர பலரும் ஆர்வமாக உள்ளனர்.தேர்தல் சந்தர்ப்பத்தில், கட்சி மாறுவது சகஜம். அவர்களின் அரசியல் எதிர்காலம் மற்றும் தொகுதி அபிவிருத்திக்காக, பா.ஜ.,வுக்கு வர தயாராக உள்ளனர்.அனைத்து கட்சி ஆட்சி காலத்திலும் உள்ளனர். தற்போது திருடர்களை கண்டுப்பிடிக்கும் பணியை, எங்கள் அரசு செய்கிறது. ஊழலைப்பற்றி மாநில காங்., தலைவர் சிவகுமார் பேசுவது, பூதத்தின் வாயால் பகவத்கீதை கேட்பது போன்றுள்ளது.
எஸ்.ஐ., நியமனத்தில், முறைகேடு நடந்திருப்பது துரதிருஷ்டவசமான விஷயமாகும். நேர்மையானவர்கள், திறமையானவர்களுக்கு அநியாயம் நடக்கிறது.நானும் கூட போலீஸ் துறையில், சப் — இன்ஸ்பெக்டராக பணியாற்றினேன். ஆனால் மோசடியாக தேர்வு நடக்கிறது என்பதே, எனக்கு தெரியவில்லை.சித்ரதுர்கா மாவட்டத்தில், மருத்துவ கல்லுாரி கட்டுவது தொடர்பாக, அமைச்சர், மாவட்ட மக்கள் பிரதிநிதிகளுடன், கூட்டம் நடத்தி முடிவு செய்யப்படும்.மாவட்டத்தில் சமீபத்தில் பெய்த மழையால், ஏற்பட்ட விளைச்சல் சேதம் குறித்து, அறிக்கை தயாரித்து அரசுக்கு அனுப்பும்படி, மாவட்ட கலெக்டருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.
Advertisement