சென்னை: தமிழக சட்டப்பேரவையில் அதிமுக உறுப்பினரை கடுமையான வார்த்தைகளைக் கொண்டு விமர்சித்த அமைச்சர் பெரியகருப்பனைக் கண்டித்து சட்டப்பேரவையிலிருந்து அதிமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தனர்.
தமிழக சட்டப்பேரவையில் பல்கலைக்கழக துணைவேந்தர்களை அரசே நியமிக்கும் மசோதா நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவுக்கு பல்வேறு கட்சிகளும் ஆதரவு தெரிவித்தன. இந்த மசோதாவை ஆரம்ப நிலையிலேயே எதிர்ப்பதாக அதிமுக தெரிவித்தது. மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக சட்டப்பேரவை உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். இந்நிலையில் மசோதா மீதான விவாதத்தின்போது, அதிமுக உறுப்பினரை கடுமையான வார்த்தைகளைக் கொண்டு அமைச்சர் பெரியகருப்பன் விமர்சனம் செய்ததாகக் கூறி அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சட்டப்பேரவை எதிர்க்கட்சித் துணைத்தலைவர் ஓ.பன்னீர்செல்வம்,” இன்று சட்டப்பேரவை நடவடிக்கையின்போது அதிமுக சார்பில், உறுப்பினர் கோவிந்தசாமி பேச முற்பட்டபோது, அமைச்சர் பெரியகருப்பன் “உட்காருடா” என்ற வார்த்தையை கொஞ்சம்கூட மரியாதை இல்லாமல் பேசிய காரணத்தால், அதிமுக சார்பில் அமைச்சர் பெரியகருப்பனைக் கண்டித்து வெளிநடப்பு செய்திருக்கிறோம்.
பல்வேறு நிலைகளில் பல்வேறு கருத்துகளாக துணைவேந்தர்கள் நியமன சட்ட மசோதா குறித்து பேசப்பட்டிருக்கிறது. ஆனால், இதுவரை யாரும், சட்டமுன்வடிவைக் கொண்டு வந்து நிறைவேற்றவில்லை என்பதை பதிவு செய்ய கடமைப்பட்டிருக்கிறேன். சந்தர்ப்ப சூழ்நிலைக்கு தகுந்தவாறு திமுக இரட்டை வேடம் போடுவதைத்தான் இது காட்டுகிறது.
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்படி ஆளுநருக்கு என்று ஒரு தனிப்பட்ட அதிகாரம் வழங்கப்பட்டிருக்கிறது. அந்த அதிகாரத்திற்கு உட்பட்டுதான் யார் ஆளுநராக இருந்தாலும் செயல்பட முடியும். அரசியலமைப்புச் சட்டத்திற்கு புறம்பாக ஆளுநரால் செயல்பட முடியாது” என்று அவர் கூறினார்.