அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய அகவிலைப்படி உயர்வை வழங்க வேண்டும் என தமிழக அரசிற்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஒ. பன்னீர்செல்வம் கோரிக்கை வைத்துள்ளார். இதுகுறித்து, அவர் தெரிவிக்கையில்,
2020-ம் ஆண்டு கொரோனா தொற்று ஆரம்பிக்கப்பட்டதையடுத்து இந்தியா முழுவதும் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதன் காரணமாக மத்திய மற்றும் மாநில அரசுகளின் வருவாயில் மிகுந்த சரிவு ஏற்பட்டதையடுத்து, 1.1.2020 முதல் மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வை மத்திய அரசு நிறுத்தி வைத்ததோடு, இந்த அகவிலைப்படி உயர்வை வழங்குவது குறித்து 1.7.2021-க்கு பிறகு முடிவு எடுக்கப்படும் என்றும், அவ்வாறு முடிவு எடுக்கும் போது 1.1.2020 முதல் நடைமுறைப்படுத்தப்பட்டு அதன் பணப் பயன் 1.7.2021 முதல் அளிக்கப்படும் என்றும் அறிவித்தது.
அதே சமயத்தில், தமிழ்நாட்டில் ஏற்பட்ட ஆட்சிமாற்றம் காரணமாக, தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு 17 விழுக்காட்டிலிருந்து 31 விழுக்காடாக 1.1.2022 முதல் தான் ரொக்கமாக வழங்கப்படுகிறது. அதாவது, மத்திய அரசு ஊழியர்களுக்கு 1.7.2021 முதல் வழங்கப்பட்ட 31 விழுக்காடு அகவிலைப்படி உயர்வு தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு 1.1.2022 முதல் வழங்கப்பட்டது. ஆறு மாத காலம் தாமதமாக வழங்கப்பட்டது.
தற்போது 1.1.2022 முதல் மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வை 31 விழுக்காட்டில் இருந்து 34 விழுக்காடாக உயர்த்தி மத்திய அரசு 31.3.2022 அன்றே அறிவித்துவிட்டது. இந்த அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்பட்டு 24 நாட்கள் கடந்துள்ள நிலையில், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கங்கள் அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட வேண்டுமென்று ஏற்கனவே கோரிக்கை விடுத்துள்ள நிலையில், அகவிலைப்படிக்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், இது குறித்து எந்த அறிவிப்பையும் தமிழ்நாடு அரசு வெளியிடவில்லை.
இந்த விஷயத்தில் அரசு மவுனமாக இருப்பதைப் பார்க்கும்போது, சென்ற முறை ஆறு மாதம் காலந்தாழ்த்தியதைப் போல் இந்த முறையும் அரசு தாமதப்படுத்துமோ என்ற சந்தேகம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் மத்தியில் மேலோங்கி உள்ளது.
கொரோனா தொற்று ஓரளவு குறைந்து, அரசின் வருமானமும் அதிகரித்துள்ள நிலையில், 15 நாட்கள் ஈட்டிய விடுப்பை ஒப்புவித்து பணமாக்கும் முறையும் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், மத்திய அரசு அறிவித்துள்ளது போல், அகவிலைப்படி உயர்வையாவது 1.1.2022 முதல் 34 விழுக்காடாக உயர்த்தி, அதாவது மூன்று விழுக்காடு உயர்த்தி நடப்பு சட்டமன்றக் கூட்டத் தொடரிலேயே அறிவிக்க வேண்டும் என்று அரசு ஊழியர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
எனவே, முதல்-அமைச்சர் இதில் உடனடியாகத் தலையிட்டு, மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாக தமிழ்நாடு அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படியை 1.1.2022 முதல் 31 விழுக்காட்டில் இருந்து 34 விழுக்காடாக, அதாவது மூன்று விழுக்காடு உயர்த்த விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.