புதுச்சேரி : அரசு ஒதுக்கீடாக மாற்றப்பட்ட நான்கு எம்.பி.பி.எஸ்., இடங்களுக்கு நாளை சிறப்பு ‘மாப் அப்’ கவுன்சிலிங் நடக்கின்றது.
புதுச்சேரி அரசு மருத்துவக் கல்லுாரியில் மொத்தம் 180 எம்.பி.பி.எஸ்., சீட்டுகள் உள்ளன. கவுன்சிலிங் நடக்கும்போது இரட்டை குடியுரிமை உள்ளிட்ட பிரச்னைகளை காரணம் காட்டி ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.இவ்வழக்கில் நான்கு என்.ஆர்.ஐ., சீட்களை நிறுத்தி வைக்குமாறு சென்டாக் நிர்வாகத்திற்கு ஐகோர்ட் உத்தரவிட்டது. இந்த 4 எம்.பி.பி.எஸ்., சீட்டும் தற்போது அரசு ஒதுக்கீடாக மாற்றப்பட்டு உள்ளது
.இதன் மூலம் அரசு மருத்துவ கல்லுாரியில் அரசு ஒதுக்கீட்டு இடங்கள் இந்தாண்டு 139 ஆக உயர்ந்துள்ளது.அரசு ஒதுக்கீட்டிற்கு மாற்றப்பட்ட இந்த நான்கு எம்.பி.பி.எஸ்., சீட்கள் புதுச்சேரி பொது பிரிவு-2, எம்.பி.சி.,-1, மாகி பொது பிரிவு-1 என்ற அடிப்படையில், நாளை 26ம் தேதி காலை 10.30 மணிக்கு சிறப்பு மாப் அப் கவுன்சிலிங் மூலம் நிரப்பப்பட உள்ளன.இந்த கவுன்சிலிங்கில் பங்கேற்க விரும்பும் தகுதியான மாணவர்கள் ஆன்லைன் அல்லது நேரடி முறையை முதலில் தேர்வு செய்ய வேண்டும்.
நேரடி கவுன்சிலிங்
புதுச்சேரியில் தொழில்நுட்ப பல்கலைக்கழகம், காரைக்காலில் காமராஜர் பொறியியல் கல்லுாரியில் நடக்கிறது.ஏனாமில் எஸ்.ஆர்.கே., கலை கல்லுாரியிலும், மாகியில் மகாத்மா காந்தி கலை கல்லுாரியில் நடக்கின்றது.ஒரு சீட்டுக்கு 10 பேர் என்ற பரிந்துரை பட்டியல் அடிப்படையில் மாப் அப் கவுன்சிலிங் மூலம் சேர்ந்த மாணவர்களும் இந்த சிறப்பு மாப் அப் கவுன்சிலிங்கில் பங்கேற்கலாம்.
முழு கல்வி கட்டணம் செலுத்திய பிறகே கவுன்சிலிங்கில் பங்கேற்க முடியும்.சிறப்பு கவுன்சிலிங்கில் இடம் கிடைத்து கல்லுாரியில் சேராவிட்டால் பணம் திரும்ப கிடைக்காது. இடம் கிடைத்த மாணவர்கள் வரும் 27ம் தேதி மாலை 3.௦௦ மணிக்குள் கல்லுாரியில் சேர வேண்டும்.
Advertisement