வேலூர் தொரப்பாடி அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவர்கள் மேசைகளை உடைத்து அட்டகாசம் செய்யும் வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
நேற்று முன்தினம் +2 மாணவர்களுக்கு வழக்கமான பள்ளி வேலை நேரத்திற்கு ஒரு மணி நேரம் முன்னதாக பள்ளி விடப்பட்டது. ஆனால் சில மாணவர்கள் வகுப்பறையில் அமர்ந்து அட்டகாசம் செய்தனர்.
ஆசிரியர்களின் அறிவுறுத்தலை பொருட்படுத்தாமல் வகுப்பறையில் உள்ள மேசைகளை தரையில் போட்டு உடைத்தும், காலால் எட்டி உதைத்தும் அட்டகாசம் செய்தனர். இந்த சம்பவம் குறித்து காவல்துறையினருக்கு ஆசிரியர்கள் தகவல் தெரிவித்தனர்.
காவல்துறையினர் வந்ததனை அடுத்து, மாணவர்கள் ஓட்டம் பிடித்தனர். மாணவர்கள் மேசைகளை உடைக்கும் காட்சி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
வேலூர் மாவட்ட கல்வி அலுவலர் சம்பத் இன்று அப்பள்ளிக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினார். பின்னர் அவர் வழங்கிய அறிக்கையின் அடிப்படையில், வருங்காலங்களில் மாணவர்கள் இது போன்ற ஒழுங்கீன செயல்களில் ஈடுபடாமல் இருப்பதற்கு வழிமுறைகள் மேற்கொள்ளப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.