குஜராத் எம்.எல்.ஏ-வும், இளம் பட்டியலினத் தலைவருமான ஜிக்னேஷ் மேவானி, பிரதமர் மோடி குறித்து அவதூறாக ட்வீட் செய்ததாக, பா.ஜ.க நிர்வாகியொருவர் மேவானி மீது அண்மையில் புகாரளித்திருந்தார். அதனடிப்படையில் அஸ்ஸாம் போலீஸ், கடந்த புதன்கிழமையன்று இரவோடு இரவாக ஜிக்னேஷ் மேவானியைக் கைது செய்தது. பின்னர் இந்த வழக்கில் 3 நாள்கள் அஸ்ஸாம் போலீஸ் காவலில் இருந்த மேவானி, கோக்ரஜார் மாவட்டத்தில் உள்ள தலைமை ஜூடிசியல் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டு, ஜாமீனில் வெளிவந்தார்.
இந்த நிலையில், மேவானி ஜாமீனில் வெளிவந்த சில மணி நேரங்களில், வேறொரு புதிய வழக்கில் அஸ்ஸாம் மாநில பர்பேட்டா போலீஸ் அவரைக் கைது செய்திருக்கிறது.
இதுகுறித்து பேசிய மேவானியின் வழக்கறிஞர் அங்ஷுமன் போரா, “மேவானி, இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு 294, 354, 353 மற்றும் 323 ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டிருக்கிறார். இதுதொடர்பாக பர்பேட்டா மாவட்ட போலீஸ் அதிகாரிகளுக்குப் பலமுறை நாங்கள் அழைப்பு விடுத்தும் பதில் ஏதும் கிடைக்கவில்லை. இது முற்றிலுமாக ஜோடிக்கப்பட்ட ஓர் பொய் வழக்கு. நாளை பார்பெட்டா தலைமை ஜூடிசியல் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் மேவானி ஆஜர்படுத்தப்படுவார். அங்கு நாங்கள் மீண்டும் ஜாமீன் பெறுவோம்” எனக் கூறினார்.