இன்ஸ்டாகிராம் மூலம் 2 கேரள சிறுமிகளிடம் பழகி அவர்களின் ஆபாச புகைப்படங்களை வெளியிடுவதாகக் கூறி மிரட்டிய இளைஞர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
சென்னை புனித தோமையர் மலை மாகாளி அம்மன் கோயில் தெருவில் வசித்து வருபவர் மார்க் டி குரூஸ் (19). இவர், சமூக வலைதளமான இன்ஸ்டாகிராம் மூலம் பல பெண்களிடம் பழகி வந்துள்ளார். இந்நிலையில், கேரள மாநிலத்தைச் சேர்ந்த இரண்டு சிறுமிகளுடன் இன்ஸ்டாகிராம் மூலம் அறிமுகமான மார்க் டி குரூஸ், அவர்களுடன் பழகி அவர்களின் ஆபாச புகைப்படங்களை பெற்றுள்ளார்.
இதையடுத்து சிறுமிகளின் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிடுவதாகவும், குடும்ப உறுப்பினர்களுக்கு அனுப்பி விடுவதாகவும் மிரட்டி வந்துள்ளார். இதைத்தொடர்ந்து சிறுமிகள் அவர்களின் பெற்றோர்களிடம் கூற பெற்றோர் கேரள மாநிலம் சைபர் குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தனர். இதைத் தொடர்ந்து புகாரை தமிழக போலீசாருக்கு அனுப்பி வைத்து நடவடிக்கை எடுக்க கேரள போலீசார் கேட்டுக்கொண்டனர்.
புகாரை பெற்றுக் கொண்ட புனித தோமையர் மலை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார், தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படிக்கும் மார்க் டி குரூஸ் ஐ கைது செய்து விசாரணை மேற்கொண்டு அவரிடமிருந்து ஒரு செல்போனை பறிமுதல் செய்தனர். இதையடுத்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர், சிறையில் அடைக்கப்பட்டார்Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM