புதுடெல்லி: தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோரை காங்கிரஸ் கட்சியில் சேர்ப்பது தொடர்பாக இன்று நடந்த கூட்டத்திலும் இறுதி முடிவெடுக்கப்படவில்லை.
மேற்கு வங்கம், தமிழகம், டெல்லி என பல மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தலில் பணியில் பங்கேற்று வெற்றி கண்ட பிரசாந்த் கிஷோர் காங்கிரஸில் இணையப்போவதாக தகவல்கள் வெளியாகின. ராகுல், பிரியங்கா உள்ளிட்டோரை பலமுறை சந்தித்து பேசினார். ஆனால் காங்கிரஸில் இணையவில்லை. அதன் பிறகு அவர் காங்கிரஸ் கட்சியையும், நேரு குடும்பத்தினரையும் கடுமையாக விமர்சித்து வந்தார்.
திடீர் திருப்பமாக பிரசாந்த் கிஷோர், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் கே.சி.வேணுகோபால் ஆகியோரை சந்தித்துப் பேசினார். இதனால் அவர் காங்கிரஸில் இணையக்கூடும் எனத் தகவல்கள் வெளியாகின. இதுதொடர்பாக கட்சியின் மூத்த தலைவர்களுடன் சோனியா காந்தி ஆலோசனை நடத்தி வந்தார்.
இந்தநிலையில் பிரசாந்த் கிஷோரின் ஐபேக் நிறுவனம் தெலங்கானா ராஷ்ட்ர சமதி கட்சிக்கு தேர்தல் பணியாற்ற நேற்று ஒப்பந்தம் செய்துள்ளது. காங்கிரஸ் கட்சியில் சேரும் பிரசாந்த் கிஷோர் தெலங்கானா ராஷ்ட்ர சமதிக்கு ஆலோசனை வழங்குவதை அம்மாநில காங்கிரஸ் தலைவர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இதனால் பிரசாந்த் கிஷோர் காங்கிரஸில் இணைவதில் தற்போது மேலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்த சூழலில் இன்றும் காங்கிரஸ் உயர்மட்ட தலைவர்கள் இன்று கூடி ஆலோசனை நடத்தினர்.
எதிர்க்கும் தலைவர்கள்
அவர் பல கட்சிகளுக்கும் ஆலோசகராக இருந்துக் கொண்டு காங்கிரஸில் எப்படி பொறுப்பு வகிக்க முடியும் என கேள்வி எழுப்பியுள்ளனர். இதனால் இறுதி முடிவெடுப்பதில் சிக்கல் நீடிக்கிறது. இந்த நிலையில் காங்கிரஸ் தலைவர்களுடன் இந்த விவகாரம் தொடர்பாக சோனியா காந்தி இன்று மீண்டும் ஆலோசனை நடத்தினார்.
பிரசாந்த் கிஷோரை காங்கிரஸ் கட்சியில் சேர்ப்பது தொடர்பாக இன்று நடந்த கூட்டத்திலும் இறுதி முடிவெடுக்கப்படவில்லை. தெலங்கானா சட்டப்பேரவைத் தேர்தலில் பணியாற்ற முதல்வர் சந்திரசேகர் ராவுடன் பிரசாந்த் கிஷோரின் ஐபேக் நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ள விவகாரம் இன்றையக் கூட்டத்தில் புயலை கிளப்பியது.
பிரசாந்த் கிஷோரை கட்சியில் சேர்ப்பது தொடர்பாக விவாதிப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள காங்கிரஸ் உயர்மட்ட தலைவர்களின் குழு பிளப்பட்டுள்ளது. பிரியங்கா காந்தி, அம்பிகா சோனி ஆகியோர் பிரசாந்த் கிஷோரை சேர்க்க ஆதரவு தெரிவித்துள்ளனர். ஆனால் திக்விஜய சிங், முகுல் வாஸ்னிக், ரந்தீப் சுர்ஜேவாலா, ஜெய்ராம் ரமேஷ். கே.சி.வேணுகோபால், ஏ.கே.ஆண்டனி ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
பிரசாந்த் கிஷோர் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி மற்றும் ஆந்திரப் பிரதேச முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி ஆகியோரின் அரசியல் ஆலோசகராக இருந்துள்ளார். இரு கட்சிகளுமே காங்கிரஸுக்கு பழைய போட்டியாளர்களாக இருப்பதை இந்த தலைவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். இதனால் இன்றையக் கூட்டத்திலும் முடிவெதுவும் எடுக்கப்பவில்லை எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.