சென்னை பரங்கிமலை பகுதியைச் சேர்ந்தவர் மார்க் டி குரூஸ் (19). இவர் சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இவர் மீது கேரளாவைச் சேர்ந்த இரண்டு சிறுமிகள் தரப்பில் சென்னை புனித தோமையர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகாரளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீஸார் குற்றம் சுமத்தப்பட்ட கல்லூரி மாணவன் மார்க் டி குரூஸிடம் விசாரணை நடத்தி அவரைக் கைது செய்தனர். விசாரணைக்குப்பிறகு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை போலீஸார் சிறையில் அடைத்தனர். அவரிடமிருந்து ஒரு செல்போனும் பறிமுதல் செய்யப்பட்டது.
இதுகுறித்து போலீஸார் கூறுகையில், “சில மாதங்களுக்கு முன் மார்க் டி குரூஸ் கேரளாவைச் சேர்ந்த ஒரு சிறுமியுடன் இன்ஸ்ட்ராகிராம் மூலம் பழகி வந்துள்ளார். ஆரம்பத்தில் இருவரும் நட்பாக பழகி வந்தனர். அந்தச் சிறுமியின் தோழியும் மார்க் டி குரூஸிடம் இன்ஸ்ட்ராகிராம் மூலம் பழகி வந்துள்ளார். இரண்டு சிறுமிகளின் போன் நம்பர்களை வாங்கிய மார்க் டி குரூஸ் அவர்களுடன் நீண்ட நேரம் பேசி வந்துள்ளார்.
இதையடுத்து இரண்டு சிறுமிகளையும் மார்க் டி குரூஸ் காதலிப்பதாகக் கூறியுள்ளார். ஆனால் இந்தக் காதல் விளையாட்டில் மார்க் டி குரூஸ் இரட்டை வேடம் போட்டுள்ளார். ஒருவரைக் காதலிப்பது இன்னொருவருக்கு தெரியாமல் பார்த்துக் கொண்டுள்ளார். அதனால் சிறுமிகள் ஏமாற்றப்பட்ட தகவலை தெரியாமல் வழக்கம் போல வாட்ஸ்அப்பில் மணிக்கணக்கில் பேசி வந்துள்ளனர். அப்போது தனித்தனியாக சிறுமிகளின் ஆபாச போட்டோக்களை ஆசைவார்த்தைகளைக் கூறி மார்க் டி குரூஸ் பெற்றுள்ளார். பின்னர், அதை வைத்துக் கொண்டு சிறுமிகளை மார்க் டி குரூஸ் மிரட்டத் தொடங்கியுள்ளார்.
டார்ச்சர் தாங்க முடியாத சிறுமிகள், தங்களின் பெற்றோர்களிடம் தகவலைத் தெரிவித்துள்ளனர். அப்போதுதான் இரண்டு சிறுமிகளையும் மார்க் டி குரூஸ் காதலித்த விவரம் தெரியவந்துள்ளது. சிறுமிகள் கூறிய தகவலைக் கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமிகளின் பெற்றோர்கள், கேரள மாநிலம் சைபர் க்ரைம் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து கேரள மாநில போலீஸார், தமிழக காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவாலின் உத்தரவின்பேரில் கூடுதல் கமிஷனர் கண்ணன் மேற்பார்வையில் புனித தோமையர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் மார்க் டி குரூஸ் மீது போக்சோ உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு விசாரணை நடத்தினோம். விசாரணையில் கேரள சிறுமிகளின் ஆபாச புகைப்படங்கள் மார்க் டி குரூஸின் செல்போனில் இருந்தது. இந்த இரண்டு சிறுமிகளைத் தவிர இன்னும் ஒரு சிறுமியின் போட்டோவும் இருந்தது. அதுதொடர்பாக மார்க் டி குரூஸிடம் விசாரணை நடத்திவருகிறோம். கல்லூரி மாணவனான மார்க் டி குரூஸ், சமூக வலைதளங்கள் மூலம் சிறுமிகளிடம் அறிமுகமாகி அவர்களை மிரட்டி வந்தது தெரியவந்துள்ளது. எனவே சமூக வலைதளங்கள் மூலம் அறிமுகமாகுபவர்களிடம் சிறுமிகளும் பெண்களும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்” என்றனர்.