“பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட சிறுமிகளுக்கு நடத்தப்படும் இரு விரல் பரிசோதனை, அரசியல் சட்டத்துக்கு முரணானது, அறிவியலற்றது, பாதிக்கப்பட்ட பெண்ணின் கண்ணியத்துக்கு எதிரானது” என்று உத்தரவிட்டுள்ளது உயர் நீதிமன்ற மதுரைக்கிளை.
16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டில் புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த ராஜீவ் காந்தி மீது காவல்துறை வழக்கு பதிவு செய்தது. வழக்கை விசாரித்த புதுக்கோட்டை மாவட்ட மகளிர் நீதிமன்றம், போக்சோ சட்டத்தின் கீழ் ராஜீவ் காந்திக்கு சாகும் வரை ஆயுள் தண்டனையும், 7 வருட கடுங்காவல் தண்டனையும் ரூ 1,20,000 அபராதமும் விதித்து உத்தரவிட்டது.
இந்த தண்டனையை எதிர்த்து உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் ராஜீவ் காந்தி மேல் முறையீடு செய்தார். அதனை விசாரித்த நீதிபதிகள் சுப்ரமணியன்-சதீஷ் குமார் அடங்கிய அமர்வு, கீழமை நீதிமன்றத்தில் விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை 20 ஆண்டு கடுங்காவல் தண்டனையாக குறைத்தும் ரூ 1,20,000 அபராதத்தை உறுதி செய்தும் உத்தரவிட்டனர்.
கூடவே இந்த உத்தரவில், “பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சிறுமிகளுக்கு மருத்துவர்கள் இருவிரல் சோதனை நடத்துவது தற்போது வழக்கமாக உள்ளது. இந்த சோதனை குழந்தையின் கண்ணியத்தை கேலி செய்யும் விதமாக உள்ளது.
போக்சோ சட்டத்தின் கீழ் பாதிக்கப்படும் சிறுமிகளுக்கு, இந்த சோதனை நடத்துவது அரசியல் சட்டத்திற்கு முரணானது. பல மாநில அரசுகள் இச்சோதனை நடத்துவதை தடை செய்துள்ளன. உச்ச நீதிமன்றமும் தடை செய்துள்ளது .
மேலும் இச்சோதனை என்பது பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு நடத்தப்படும் அறிவியலற்ற பரிசோதனை முறையாகும். அரசியலமைப்பிற்கு எதிரானது.
இது பாதிக்கப்பட்டவரின் தனியுரிமை, உடல் மற்றும் மனநிலை, கண்ணியத்தை, உரிமையை மீறுகிறது.
எனவே, பாலியல் குற்றங்களால் பாதிக்கப்பட்ட சிறுமிகளுக்கு மருத்துவர்களால் நடத்தப்படும் இருவிரல் பரிசோதனை நடைமுறையை உடனடியாகத் தமிழக அரசு தடை செய்யவேண்டும்” என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.