‘இளையராஜா 5 பாரத ரத்னாவுக்கு தகுதியானவர்’ – ‘அக்கா குருவி’ இசை வெளியீட்டில் அமீர்

மொழி தெரியாதவர்களை கூட இளையராஜாவின் இசை கவர்ந்துள்ளதாக, ‘சில்ரன் ஆஃப் ஹெவன்’  படத்தின் தமிழ் ரீமேக் ‘அக்கா குருவி‘ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இயக்குநர் அமீர் கூறியுள்ளார்.

‘உயிர்’, ‘மிருகம்’, ‘சிந்து சமவெளி’ உள்ளிட்ட சர்ச்சைக்குரிய படங்களை இயக்கியவர் இயக்குநர் சாமி. இவரின் இயக்கத்தில் கடந்த 2015-ம் ஆண்டு உருவான ‘கங்காரு’ திரைப்படத்திற்குப் பிறகு உருவாகியுள்ள திரைப்படம் ‘அக்கா குருவி’. உலகப்புகழ் பெற்ற ஈரானிய திரைப்படமான ‘சில்ரன் ஆஃப் ஹெவன்’ (Children of Heaven) படத்தின் அதிகாரப்பூர்வ மறுபதிப்பாக இந்தப்படம் உருவாகியுள்ளது.

ஒரு ஏழை குடும்பத்தில் பிறந்து பள்ளியில் படிக்கும் அண்ணன், தங்கைக்கு இடையே ஒரு ஷுவை கொண்டு, பாசத்தை மனதை உலுக்கும் வகையில் அற்புதமான படைப்பாக கொடுத்திருப்பார் இயக்குநர் மஜித் மஜிதி. கடந்த 1997-ம் ஆண்டு வெளியான இந்தப் படத்தில், தங்கை பள்ளிக்கு வேகமாக ஓடும்போது ஷு, சாக்கடை நீரில் விழுந்துவிடும். இதனால் பள்ளிக்கு செல்லாத முடியாத சூழ்நிலையில், வீட்டில் பெற்றோரிடமும் சொல்ல முடியாது. இந்நிலையில், அண்ணன் தங்கை இருவரும் ஒரே ஷுவை பயன்படுத்தி வெவ்வேறு பள்ளியில் படிக்கும் நிலையில், எப்படி சமாளிக்கின்றனர் என்பதே கதைக்களமாக இருக்கும்.

image

உலகம் முழுவதும் பெரும் வரவேற்பைப் பெற்ற இந்தப் படத்தைத்தான் இயக்குநர் சாமி தமிழ் மற்றும் தெலுங்கில் ‘அக்கா குருவி’ ஆக ரீமேக் செய்கிறார். கொரோனா காலத்திற்கு முன்னதாக எடுக்கப்பட்ட இந்தப் படம், ஊரடங்கால் வெளியிடப்படாமல் இருந்தநிலையில், தற்போது மே மாதம் 6-ம் தேதி வெளியாகிறது. இந்தப் படத்தில் 3 பாடல்கள் உள்ளநிலையில், மூன்று பாடல்களையும் இளையராஜாவே எழுதியுள்ளார். 

சென்னையில் ஏப்ரல் 25-ம் தேதி இந்தப் படத்தின் ஆடியோ வெளியீட்டை பிரம்மாண்டமாக நடத்த உள்ளதாக கூறப்பட்டநிலையில், இந்தப் படத்தின் ஆடியோ வெளியீடு இன்று நடைபெற்றது. இந்த விழாவில் பேசிய இயக்குநர் அமீர், “ ‘சில்ரன் ஆஃப் ஹெவன்’ படத்தின் இயக்குநர் மஜித் மஜிதிக்கு ‘அக்கா குருவி’ போட்டு காட்டப்பட்டுள்ளது. அவர் படத்தை பார்த்துவிட்டு இசையை பற்றி குறிப்பிட்டு பேசியுள்ளார்.

image

இளையராஜாவின் இசை தமிழர்கள், உலக தமிழர்களை தாண்டி மொழி தெரியாதவர்களை கூட கவர்ந்துள்ளது. அவருக்கு ஒரு பாரத ரத்னா இல்லை. ஐந்து பாரத ரத்னா கொடுத்தாலும் தகுதியானது. மொழி தெரியாதவர்கள் கூட பாராட்டுவதை விட ஜனாதிபதி பதவியோ அல்லது வேறு எந்த பதவியோ பெரியது கிடையாது. இளையராஜா இங்கு இருந்தால் கூட நான் இந்த கருத்தை கூறியிருப்பேன்” என்று தெரிவித்தார்.

மதுரை முத்து மூவிஸ் மற்றும் கனவு தொழிற்சாலை இணைந்து தயாரித்துள்ள இந்தப் படத்தை, பிரபல தியேட்டர் நிறுவனமான பிவிஆர் பிக்சர்ஸ் நிறுவனம் தமிழகமெங்கும் வெளியிடுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.