துணைவேந்தர் மசோதா மீதான விவாதத்தின்போது தங்கள் கட்சி உறுப்பினரை, அமைச்சர் அவமரியாதை செய்து பேசியதால் வெளிநடப்பு செய்ததாக எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் உள்ள 13 துணைவேந்தர்களை தற்போது ஆளுநரே நியமித்து வருகிறார். இந்நிலையில் மாநில அரசே துணைவேந்தர்களை நியமிக்க வழி செய்யும் சட்ட மசோதாவை உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தாக்கல் செய்தார். மசோதாவை கொண்டு வருவதற்கான காரணங்களை பட்டியலிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார். எனினும் மசோதாவிற்கு பிரதான எதிர்க்கட்சியான அதிமுக எதிர்ப்பு தெரிவித்தது. பாரதிய ஜனதாவின் உறுப்பினர்களும், மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்தனர்.
அடுத்து பேசிய காங்கிரஸ், விடுதலைச்சிறுத்தைகள், இடதுசாரி கட்சிகள் உள்ளிட்ட கட்சிகளின் உறுப்பினர்கள் மசோதாவை ஆதரித்தனர். இந்த சூழலில் மசோதா தொடர்பாக காங்கிரஸ் மற்றும் அதிமுக உறுப்பினர்கள் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். இதன் பின் மசோதா மீது குரல் வாக்கெடுப்பு நடந்தது. இதில் அதிக ஆதரவு கிடைத்த நிலையில் மசோதா நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார்.
இதன் பின் பேசிய அமைச்சர் பொன்முடி, தெலங்கானா, ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் துணைவேந்தர்களை அரசே நியமிக்கும் சட்டம் உள்ளதாக தெரிவித்தார். தமிழகத்திலும் அந்த நிலையை கொண்டு வருவதில் என்ன தவறு. பல்கலைக்கழகங்களின் வேந்தராக முதலமைச்சரை ஏன் நியமிக்க கூடாது என்றும் கேள்வி எழுப்பினார். இதன்பின்னர் துணைவேந்தர் நியமனங்களில் ஆளுநர், மாநில அரசை மதிக்காத போக்கு உள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். துணைவேந்தர்களை மாநில அரசே நியமிப்பது தொடர்பாக உரையாற்றிய முதலமைச்சர், மசோதா கொண்டு வரப்படுவதற்கான காரணங்களை தெரிவித்தார்.
இந்நிலையில், துணைவேந்தர் மசோதா மீதான விவாதத்தின்போது தங்கள் கட்சி உறுப்பினரை, அமைச்சர் அவமரியாதை செய்து பேசியதால் வெளிநடப்பு செய்ததாக எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.வெளிநடப்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பன்னீர் செல்வம், “சட்டபேரவை நடவடிக்கையின்போது அதிமுக சார்பில், உறுப்பினர் கோவிந்தசாமி பேச முற்பட்டபோது, அமைச்சர் பெரியகருப்பன் “உட்காருடா” என்ற வார்த்தையை கொஞ்சம்கூட மரியாதை இல்லாமல் பேசிய காரணத்தால், அ.தி.மு.க சார்பில் அமைச்சர் பெரியகருப்பனைக் கண்டித்து வெளிநடப்பு செய்திருக்கிறோம்.
பல்வேறு நிலைகளில் பல்வேறு கருத்துகளாக துணைவேந்தர்கள் நியமன சட்ட மசோதா குறித்து பேசப்பட்டிருக்கிறது. ஆனால், இதுவரை யாரும், சட்டமுன்வடிவைக் கொண்டு வந்து நிறைவேற்றவில்லை என்பதை பதிவு செய்ய கடமைப்பட்டிருக்கிறேன். சந்தர்ப்ப சூழ்நிலைக்கு தகுந்தவாறு திமுக இரட்டை வேடம் போடுவதைத்தான் இது காட்டுகிறது.
இந்திய அரசியல் சட்டத்தில் ஆளுநருக்கு என்று ஒரு தனிப்பட்ட அதிகாரம் வழங்கப்பட்டு இருக்கிறது. அந்த அதிகாரத்துக்குட்பட்டு தான் யார் ஆளுநராக இருந்தாலும் செயல்பட முடியும். அரசியல் அமைப்பு சட்டத்துக்கு புறம்பாக எந்த ஆளுநரும் செயல்பட முடியாது.
ஆளுநர் தான் துணை வேந்தர்களை நியமனம் செய்ய வேண்டும் என்று இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் இல்லை. ஆனால் பல்வேறு கருத்துக்கள் இருக்கிறது. அரசு நியமிக்க வேண்டும் என்ற கருத்தும், ஆளுநர் நியமிக்க வேண்டும் என்ற கருத்தும் இருக்கிறது. அதை தமிழ்நாடு அரசுதான் முடிவு செய்ய வேண்டும்” இவ்வாறு கூறினார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM