டோக்கியோ-உலகிலேயே மிக வயதான நபர் என, 2019ல் கின்னஸ் புத்தகத்தில் பதிவான ஜப்பானை சேர்ந்த, 119 வயது மூதாட்டி, சமீபத்தில் மரணம் அடைந்தார் என அந்நாட்டு அரசு நேற்று கூறி உள்ளது.
கிழக்கு ஆசிய நாடான ஜப்பானின் தென்மேற்கு பகுதியில் உள்ள புகுவோகாவை சேர்ந்தவர் கேன் தனகா, 119. உலகின் மிக வயதான நபர் என, 2019ல் இவரது பெயர் கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றது. இந்நிலையில், கேன் தனகா 19ம் தேதி மரணம் அடைந்ததாக அந்நாட்டு அரசு கூறி உள்ளது.இவர், 1903ம் ஆண்டு பிறந்தவர். கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில், கேன் தனகாவின் 116வது வயதில் உலகின் மிக வயதானவர் என, பெயர் பதிவானது.
இதற்கிடையே, 2020 செப்டம்பரில் இவரது வயது 117 ஆண்டு மற்றும் 261 நாட்களை எட்டியது.இதையடுத்து, ஜப்பானில் அதிக நாட்கள் வாழ்ந்தவர் என, அந்நாட்டு ஆவணங்கள் இவரது பெயரை பதிவு செய்தன. பெற்றோருக்கு ஏழாவது குழந்தையாக பிறந்த இவர், தன் 19ம் வயதில் திருமணம் செய்து கொண்டார். ருசியான உணவுகளை உண்பது, தன் நீண்ட ஆயுளுக்கு காரணம் என, தனகா ஏற்கனவே கூறி உள்ளார். இவரது மரணத்தை அடுத்து, பிரான்ஸ் நாட்டில் வசிக்கும், 118 வயதைக் கடந்த லூசில் ராண்டன் என்ற மூதாட்டி, உலகின் மிக வயதான நபராக மாறி உள்ளார்.
Advertisement