வாஷிங்டன்: எலான் மஸ்க்கின் ஆபஃருக்கு ட்விட்டர் நிர்வாகக் குழு சம்மதம் தெரிவித்துவிட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
அண்மையில் ட்விட்டர் சமூக வலைதளத்தில் பயனர்களின் கருத்து சுதந்திரம் குறித்து கேள்வி எழுப்பியிருந்தார் மஸ்க். தொடர்ந்து அந்நிறுவனத்தின் 9.2 சதவீத பங்குகளை வாங்கியிருப்பதாக மஸ்க் தெரிவித்திருந்தார். அதோடு ட்விட்டரில் எடிட் பட்டன் குறித்தும் அவர் பேசியிருந்தார். அதன் பின்னரே ட்விட்டர் நிறுவனத்தின் ஒரு பங்கை 54.20 அமெரிக்க டாலர்களுக்கு வாங்க முன்வந்தார் மஸ்க்.
இது தொடர்பாக ஞாயிறு அன்று நடைபெற்ற ட்விட்டர் நிர்வாகக் குழு உறுப்பினர்கள் இடையே பேசப்பட்டுள்ளது. இதில் 11 பேர் அடங்கிய உறுப்பினர்கள் பங்கேற்றுள்ளனர். அதையடுத்து, ட்விட்டர் மற்றும் மஸ்க் என இரண்டு தரப்பிலும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இந்தப் பேச்சுவார்த்தையில், இப்போது முடிவுகள் எட்டப்பட்டன என முன்னணி ஆங்கில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஏஎஃப்பி (AFP), வஷிங்டன் போஸ்ட், ப்ளூம்பெர்க் போன்ற முன்னணி ஆங்கில ஊடகங்கள் ட்விட்டர் விற்பனையை உறுதிப்படுத்தியுள்ளன.
அதன்படி, 44 பில்லியன் டாலருக்கு மஸ்க்கிடம் விற்க ட்விட்டர் நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளது. ட்விட்டர் நிர்வாகக் குழு உடனான பேச்சுவார்த்தையில் இந்த தொகைக்கு நிறுவனத்தை கொடுப்பதற்கு சம்மதம் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், எப்போது அதிகாரபூர்வமாக தொகை பரிமாற்றம் நடக்கும், மஸ்க் வாங்கிய பிறகு ட்விட்டர் நிறுவனத்தை வழிநடத்த போவது யார் என்பது போன்ற விவரங்கள் இப்போது வெளியாகவில்லை. தற்போது ட்விட்டர் நிறுவனத்தை இந்தியரான பராக் அகர்வால் வழிநடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த ஒப்பந்தம் உறுதிசெய்யப்பட்டு இருப்பதால், 273 பில்லியன் டாலர் சொத்து மதிப்பு உடன் இதற்கு முன்பு வரை எலெக்ட்ரிக் வாகன தொழிலதிபராகவும், ஸ்பேஸ் எக்ஸ் என்னும் விண்வெளி நிறுவன அதிபராக மட்டுமே அறியப்பட்டு வந்த எலான் மஸ்க், தனது நிறுவனங்கள் பட்டியலில் தகவல் தொழில்நுட்ப நிறுவனம் ஒன்றையும் சேர்த்த பெருமைக்குள்ளாகிறார்.