சான் பிரான்சிஸ்கோ: ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனர் எலான் மஸ்க் அண்மையில் ட்விட்டரை 46.5 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு வாங்க தயார் என அறிவித்தார். இந்நிலையில், அது தொடர்பாக ட்விட்டர் நிறுவனம் பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளதாக தெரிகிறது.
அண்மையில் ட்விட்டர் சமூக வலைதளத்தில் பயனர்களின் கருத்து சுதந்திரம் குறித்து கேள்வி எழுப்பியிருந்தார் மஸ்க். தொடர்ந்து அந்நிறுவனத்தின் 9.2 சதவீத பங்குகளை வாங்கியிருப்பதாக மஸ்க் தெரிவித்திருந்தார். அதோடு ட்விட்டரில் எடிட் பட்டன் குறித்தும் அவர் பேசியிருந்தார். அதன் பின்னரே ட்விட்டர் நிறுவனத்தின் ஒரு பங்கை 54.20 அமெரிக்க டாலர்களுக்கு வாங்க முன்வந்தார் மஸ்க்.
இது தொடர்பாக ஞாயிறு அன்று நடைபெற்ற ட்விட்டர் நிர்வாகக் குழு உறுப்பினர்கள் இடையே பேசப்பட்டுள்ளது. இதில் 11 பேர் அடங்கிய உறுப்பினர்கள் பங்கேற்றுள்ளனர். அதையடுத்து, ட்விட்டர் மற்றும் மஸ்க் என இரண்டு தரப்பிலும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. இருந்தும் அதில் சுமுக முடிவு எட்டப்படவில்லை எனவும், பேச்சுவார்த்தை தொடர்ந்து வருவதாகவும் சொல்லப்பட்டுள்ளது.
இரு தரப்புக்கும் இடையே பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டால் மஸ்க் வசம் ட்விட்டர் உரிமையாகும். முன்னதாக, ட்விட்டர் நிறுவனத்தில் அவருக்கு நிர்வாகக் குழுவில் உறுப்பினராகும் வாய்ப்பு கிடைத்தும், அதை நிராகரித்தார் மஸ்க் என்பது குறிப்பிடத்தக்கது.