திருவிதாங்கூர் மன்னர்கள் கட்டுப்பாட்டில் இருந்த கன்னியாகுமரி மாவட்டக் கோயில்கள் இப்போது இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளன. திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் இருந்து பிரிந்து தாய்த் தமிழகத்துடன் இணைக்கப்பட்ட சுமார் 490 கோயில்கள் ‘கன்னியாகுமரி மாவட்டத் திருக்கோயில்கள்’ என்ற பெயரில் இயங்கிவருகின்றன. இந்த கோயில்களில் கேரள மாநிலத்தில் உள்ள கோயில்களில் நடப்பதுபோன்ற ஆகம பூஜைகள் நடைபெற்று வருகின்றன. அதில் பிரசித்தி பெற்ற கோயில்கள் என கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயில், சுசீந்திரம் தாணுமாலைய சுவாமி கோயில் நாகர்கோவில் நாகராஜா கோயில், வேளிமலை குமாரசுவாமி கோயில், மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில், திருவட்டாறு ஆதிகேசவப் பெருமாள் கோயில் உள்ளிட்டவை அமைந்துள்ளன. இந்தக் கோயில்களில் தமிழகம் மட்டுமல்லாது கேரள மாநிலத்தில் இருந்தும் அதிக அளவில் பக்தர்கள் வந்து வழிபட்டுச் செல்வது வழக்கம்.
வரும் மே மாதம் 4-ம் தேதி அக்னி வெயில் தொடங்க உள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் கோடைமழை சில நாள்களாகப் பெய்தாலும் அக்னி நட்சத்திரம் தொடங்கியவுடன் வெயிலின் உக்கிரம் அதிகமாக வாய்ப்புள்ளது. கோடை காலத்தில் கோயில்களுக்கு வரும் பக்தர்களின் நலனைக் கருத்தில்கொண்டு, சில வசதிகள் செய்ய அரசு உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து கன்னியாகுமரி மாவட்ட திருக்கோயில்களின்கீழ் உள்ள முக்கியக் கோயில்களில் தரைகளில் டேம் புரூப் பெயின்ட் அடிக்கும் பணி நடைபெற்று வருகிறது.
வீடுகளின் சூட்டைக் குறைக்க மொட்டை மாடிகளில் டேம் புரூப் பெயிண்ட் அடிப்பது வழக்கம். இந்தப் பெயிண்டை தரையில் அடிப்பதன் மூலம் பாதங்கள் சுடாமல் இருக்கும். கோயில் வளாகங்களில் செருப்பு இல்லாமல் செல்லும் பக்தர்களின் பாதங்களில் சூடு ஏறாமல் இருப்பதற்காக, நடைபாதைகளில் டேம் புரூப் பெயிண்ட் அடிக்கப்பட்டுள்ளது.
இதுபற்றிக் கன்னியாகுமரி மாவட்டத் திருக்கோயில்கள் இணை ஆணையர் ஞானசேகர் கூறுகையில், “கன்னியாகுமரி மாவட்டத்தில் பக்தர்கள் அதிக அளவில் வருகைதரும் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயில், சுசீந்திரம் தாணுமாலைய சுவாமி கோயில், நாகர்கோவில் நாகராஜா கோயில், வேளிமலை குமாரசுவாமி கோயில் மற்றும் மண்டைக்காடு கோயில்களில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
பக்தர்கள் பாதங்கள் சுடாமல் இருக்க டேம்புரூப் பெயிண்ட் அடிக்கப்பட்டுள்ளன. அதுமட்டுமல்லாது கோடை காலத்தில் இந்த கோயில்களுக்கு வரும் பக்தர்களுக்கு நீர் மோர் வழங்கவும் தமிழக அரசு உத்தரவுப் படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என்றார்.