சென்னை: கரோனா தொற்று பாதிப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியர்கள், சுகாதார அதிகாரிகளுடன் முதல்வர் ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்த உள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். சென்னை ஐஐடியில் கரோனா தொற்று பாதிக்கப்பட்ட 60 மாணவர்களில் 40 பேர் குணமடைந்துள்ளனர் என்றும் அவர் தெரிவித்தார்.
சென்னை கிண்டி ஐஐடி வளாகத்தில் தங்கிப் படிக்கும் மாணவர்களுக்கு ஏற்பட்ட கரோனா தொற்று பாதிப்பு குறித்து,சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் ஆகியோர் நேற்று ஆய்வு செய்தனர். மாநகராட்சி துணை ஆணையர் மனிஷ், மண்டல தலைவர் துரைராஜ், நகர நல அலுவலர் ஜெகதீசன் ஆகியோர் உடன் இருந்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் கூறியதாவது: “இந்தியாவில் டெல்லி, மகாராஷ்டிரா, உத்தராகண்ட், உத்தரபிரதேசம், ஹரியாணா போன்ற மாநிலங்களில் தினசரிகரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. டெல்லியில் 1,094 பேருக்கு தொற்றுபாதிப்பு ஏற்பட்டுள்ளது. 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சிகிச்சையில் உள்ளனர். தமிழகத்தை மீண்டும் கரோனா தொற்றிலிருந்து பாதுகாக்கவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் முதல்வர் அறிவுறுத்தலின்படி பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழகம் முழுவதும் கடந்த 1 மாத காலத்தில் கரோனா இறப்பு இல்லை.
சென்னை ஐஐடியில் இதுவரை 60பேருக்கு மட்டுமே தொற்று பாதிப்புஏற்பட்டுள்ளது. அங்கு மிகுந்த அக்கறையோடு பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. தொற்று பாதித்தவர்களை தனிமைப்படுத்தி 24 மணிநேரமும் சிகிச்சை அளிக்கப்படுகிறது. கடந்த நான்கு நாட்களில் 40 பேர் குணமடைந்துள்ளனர்.
தமிழகத்தில் வரும் மே 8-ம் தேதி 1 லட்சம் இடங்களில் சிறப்பு மெகா கரோனா தடுப்பூசி முகாம்கள் நடக்க உள்ளன. இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் மிகப்பெரிய அளவுக்கு கரோனா தடுப்பூசி முகாம் நடக்கிறது. இந்த முகாம்களில் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்த வேண்டிய 1 கோடியே 46 லட்சம் பேர், முதல் தவணை தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டிய 54 லட்சம் பேர் என 2 கோடி பேரும் தடுப்பூசி செலுத்தி பயனடைய வேண்டும். 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு தமிழக அரசின் சார்பில் பூஸ்டர் தவணை தடுப்பூசி செலுத்தும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது.
தமிழகத்தில் தடுப்பூசி செலுத்துவது ஒரு பேரியக்கமாகவே நடக்கிறது. அதன்படி, வரும் 8-ம் தடுப்பூசி முகாம்கள் ஒரு திருவிழாபோல நடத்தப்படும். இது தொடர்பாக அனைத்து மாவட்ட ஆட்சியர்கள், சுகாதார அலுவலர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை (இன்று) ஆலோசனை நடத்துகிறார். தமிழகத்தில் கரோனா பாதிப்பு மற்றும் தொற்று தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முதல்வர் அறிவுறுத்த இருக்கிறார்”. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
செயலாளர் அறிவுறுத்தல்: இதனிடையே, சுகாதாரத்துறை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன், அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் சென்னை மாநகராட்சி ஆணையருக்கு எழுதியுள்ள கடிதத்தில், ‘அனைத்து மாவட்ட நிர்வாகங்களும் பொதுமக்கள் கூடும் இடங்களில், அவர்கள் முகக் கவசம் அணிவதை தொடர்ந்து வலியுறுத்த வேண்டும். முதியவர்கள் மற்றும் இணை நோய் பாதிப்பு இருப்பவர்களை கண்டறிந்து பூஸ்டர் தவணை தடுப்பூசி செலுத்தும் பணியை விரைவுபடுத்த வேண்டும். மருத்துவ கட்டமைப்புகளை அனைத்து மாவட்டங்களிலும் தயார் நிலையில் வைக்க வேண்டும். தமிழகத்தில் 93 சதவீதம் ஒமைக்ரான் பிஏ2 வைரஸ் மட்டுமே கண்டறியப்பட்டுள்ளது. எக்ஸ்இ வகை வைரஸ் பாதிப்பு இதுவரை கண்டறியப்படவில்லை’ என தெரிவித்துள்ளார்.
52 பேருக்கு தொற்று தமிழகத்தில் புதிதாக 52 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் நேற்று ஆண்கள் 33, பெண்கள் 19 என மொத்தம் 52 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். அதிகபட்சமாக சென்னையில் 34 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் தமிழகத்தில் பாதிப்பு எண்ணிக்கை 34 லட்சத்து 53,552 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 34 லட்சத்து 15,193 பேர் குணமடைந்துள்ளனர். நேற்று மட்டும் 28 பேர் குணமடைந்து வீடுகளுக்கு சென்றனர். தமிழகம் முழுவதும் 334 பேர் சிகிச்சையில் உள்ளனர். நேற்றும் உயிரிழப்பு இல்லை என்று தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் நேற்று முன்தினம் கரோனா தொற்று பாதிப்பு 53 ஆகவும், சென்னையில் 36 ஆகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது.