கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் உள்ள தனியார் உயர் நிலைப்பள்ளியின் 11-ம் வகுப்புக்கான சேர்க்கை விண்ணப்பப் படிவத்தில், “உங்கள் குழந்தைகள் பள்ளியில் நடைபெறும் பள்ளி காலை பிரார்த்தனை கூட்டம் (School morning prayer) உட்பட அனைத்திலும் கலந்துகொள்வார்கள் என்றும், பைபிளைப் பள்ளிக்குள் கொண்டுவருவதை உறுதிப்படுத்துங்கள்” என்ற உறுதிமொழியைப் பெறுவதாகவும் இந்து ஜனஜக்ருதி சமிதி (Hindu Janajagruti Samithi) குற்றம் சுமத்தியுள்ளது.
இது தொடர்பாக இந்து ஜனஜக்ருதி சமிதி-யின் மாநில செய்தித் தொடர்பாளர் மோகன் கவுடா, “கிறிஸ்தவ பள்ளிகளில் கிறிஸ்தவர்கள் அல்லாதவர்களும் படிக்கிறார்கள். அங்குப் பைபிளைக் கொண்டுவர வேண்டும் என உறுதி மொழி எடுப்பதும், காலை மாலை பிரார்த்தனையில் பங்குபெற வைப்பதும் கர்நாடக கல்வி சட்டத்துக்கு எதிரானது.
அங்குப் பைபிளைப் படிக்கக் கட்டாயப்படுத்துகிறார்கள். பைபிளில் உள்ள போதனைகளைக் கட்டாயமாக படிக்க வைக்கப்படுகிறார்கள்” என்று புகார் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அந்த கல்வி நிறுவனம், “இது கிறிஸ்தவ பள்ளி. இங்குப் பைபிள் மூலம் அடிப்படியிலான கல்வியையே வழங்குகிறோம்” எனத் தனது நிலைப்பாட்டை விளக்கியுள்ளது.
முன்னதாக, அனைத்து மதத்தினரும் படிக்கும் அரசுப் பள்ளி பாடத்திட்டத்தில் பகவத்கீதையை சேர்ப்பது குறித்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என்றும் முதல்வர் தெரிவித்திருந்தார்.
இதற்கு முன்னதாக, குஜராத் அரசு மார்ச் 17 அன்று, 6-ம் வகுப்பு முதல் 12 வகுப்புகளுக்கான பள்ளி பாடத்திட்டத்தில் “இந்தியாவின் பெருமை மற்றும் மரபுகளுடன் தொடர்பை வளர்க்கும்” என பகவத்கீதையை சேர்க்க முடிவு செய்தது.
அது தொடர்பான சுற்றறிக்கையில், மாணவர்களின் முழுமையான வளர்ச்சிக்கு உகந்த வகையில் இந்தியக் கலாசாரம் மற்றும் அறிவியலைப் பள்ளி பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டும் என தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.