திருப்பதி:
ஆந்திர மாநிலம் திருப்பதி ஆட்டோ நகரை சேர்ந்தவர் சீனிவாசலு (வயது 45). மினி வேன் வைத்து ஓட்டி வருகிறார். இவர் நேற்று தனது குடும்பத்தினர் 12 பேருடன் காளஹஸ்தி அருகே உள்ள கனனுவாரு கெங்கையம்மன் கோவிலில் பொங்கல் வைக்க மினி வேனில் சென்றனர்.
பொங்கல் வைத்து விட்டு நேற்று இரவு வீடு திரும்பினர். காளஹஸ்தி அருகே நாயுடுபேட்டை- ரேணிகுண்டா சாலையில் நக்கஹரிகனவாடா என்ற இடத்தில் வேன் வந்தது. அங்கு சாலை சீரமைக்கும் பணி நடந்து வருகிறது.
அப்போது எதிரே வந்த லாரியும் மினி வேனும் எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் மோதியது.
இதில் மினி வேன் நொறுங்கி அதில் இருந்தவர்கள் தூக்கி வீசப்பட்டனர்.
இதில் படுகாயம் அடைந்த சீனிவாசலு தம்பி அர்ஜூனய்யா (43), அவரது மனைவி சரசம்மா (40), மாரியம்மா (43) ஆகிய 3 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக துடிதுடித்து இறந்தனர்.
மினி வேன் உரிமையாளர் சீனிவாசலு டில்லி ராணி, மாரியம்மா, ஆனந்து, கோபி, கவிதா, தரணி, தனுஷ், மோஷிதா, பவ்யா ஆகிய 9 பேர் படுகாயம் அடைந்தனர்.
விபத்து குறித்து தகவல் அறிந்த காளகஸ்தி போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்கர் நாயுடு சப்-இன்ஸ்பெக்டர் மகேஷ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று படுகாயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக காளஹஸ்தி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் விபத்தில் இறந்தவர்களின் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக காளஹஸ்தி அரசு ஆஸ்பத் திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.