டெல்லி: காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து சட்டப்பிரிவு 370 ரத்தை எதிர்த்து வழக்கை கோடை விடுமுறைக்கு பிறகு விசாரிக்கப்படும் என உச்சநீதிமன்றம் தெரிவித்து உள்ளது.
மோடி தலைமையிலான பாஜக அரசு, ஜம்மு-காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதாவை கடந்த 2019ம் ஆண்டு, ஆகஸ்டு 6ஆம் தேதி ஜம்மு-காஷ்மீருக்கு அளித்து வந்த சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்து நாடாளுமன்றத்தில் தீர்மானம் கொண்டு வந்து ரத்து செய்தது. அத்துடன் ஜம்மு-காஷ்மீர் பகுதியை சட்டசபை உள்ள யூனியன் பிரதேசமாகவும், லடாக் பகுதியை சட்டசபை அற்ற யூனியன் பிரதேசமாகவும் மத்திய அரசு அறிவித்தது. இது வரும் அக்டோபர் 31ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வந்தது.
இந்த நிலையில், மாநிலத்தில் எல்லை நிர்ணயம் செய்யப்பட்டுள்ள நிலையில், சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டதற்கு எதிரான மனுக்களை அவசரமாக விசாரிக்க வேண்டும் என்று மனுதாரர்களின் வழக்கறிஞர் உச்சநீதிமன்ற தலைமைநீதிபதி முன்பு கோரிக்கை விடுத்தார்.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா மற்றும் நீதிபதி ஹிமா கோஹ்லி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு, மனுதாரர்கள் சார்பில் மூத்த வழக்கறிஞர் சேகர் நபாடே ஆஜரானார். அப்போது, மாநிலத்தில் எல்லை நிர்ணயம் செய்யப்பட்டுள்ள நிலையில், சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டதற்கு எதிரான மனுக்களை அவசரமாக விசாரிக்க வேண்டும் என்று அவர் வாதாடினர். இதுதொடர்பான மனுவையும் தாக்கல் செய்தார். அவரது மனுவை நீதிபதிகள் கவனத்தில் கொண்டனர்.
தலைமை நீதிபதி என்.வி.ரமணா கூறுகையில். ‘இது ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியலமைப்பு அமர்வு விசாரிக்க வேண்டிய விவகாரம். எனவே, நான் அந்த அமர்வை மீண்டும் அமைக்க வேண்டும்’ என்றவர் கோடை விடுமுறைக்கு பிறகு இந்த வழக்குகள் விசாரணைக்கு பட்டியலிடப்படும் என்றார்.