புதுடெல்லி: காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. இந்த வழக்குகள் மீதான விசாரணையை ஜூலையில் தொடங்க உச்ச நீதிமன்றம் ஒப்புக் கொண்டுள்ளது.
காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வகை செய்யும் 370-வது சட்டப்பிரிவில் சில திருத்தங்கள் செய்யப்பட்டு கடந்த 2019 ஆகஸ்ட் 5-ம் தேதி அரசாணை வெளியிடப்பட்டது. இதன்மூலம் காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் சுமார் 20-க்கும்மேற்பட்ட வழக்குகள் தொடரப்பட்டன.
இந்த வழக்குகளை தலைமை நீதிபதி தலைமையிலான 5 நீதிபதிகள் அமர்வு விசாரித்து வருகிறது. 7 நீதிபதிகள் அமர்வுக்கு வழக்குகளை மாற்ற மனுதாரர்கள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்த கோரிக்கையை கடந்த 2020 மார்ச் 2-ம் தேதி உச்ச நீதிமன்றம் நிராகரித்தது. இதன் பிறகு கரோனா ஊரடங்கு அமல் செய்யப்பட்டது.
ஊரடங்கு தளர்த்தப்பட்ட பிறகு பல்வேறு கட்டுப்பாடுகள் தொடர்ந்தன. உச்ச நீதிமன்ற வழக்கு விசாரணைகள் காணொலி வாயிலாக நடைபெற்றன. இதன் காரணமாக நீண்ட காலமாக வழக்கு விசாரணை நிலுவையில் உள்ளது.
காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டபோது, அந்த மாநிலம் 2 ஆகப் பிரிக்கப்பட்டது. இதன்படி ஜம்மு-காஷ்மீர் சட்டப்பேரவையுடன்கூ டிய யூனியன் பிரதேசமாகவும், லடாக் சட்டப்பேரவை இல்லாத யூனியன் பிரதேசமாகவும் உருவானது. தற்போது ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் தொகுதி வரையறை பணிகள் தீவிரமடைந்துள்ளன.
இதை சுட்டிக்காட்டி உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி. ரமணாவிடம், மனுதாரர்கள் சார்பில் நேற்று முறையிடப்பட்டது. மனுதாரர் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள் ப.சிதம்பரம், கபில் சிபல், சேகர் நாப்தே கூறும்போது, “காஷ்மீரில் தொகுதி வரையறை தீவிரமடைந்து உள்ளது. எனவே சிறப்பு அந்தஸ்து ரத்து விவகாரம் தொடர்பான வழக்குகளை விரைந்து விசாரிக்க வேண்டும்” என்று வலியுறுத்தினர்.
தலைமை நீதிபதி என்.வி. ரமணா கூறும்போது, ” 5 நீதிபதிகள் அமர்வு வழக்கை விசாரித்து வருகிறது. அவர்களோடு கலந்தாலோசிக்க வேண்டும். சில நீதிபதிகள் ஓய்வு பெறுகின்றனர். கோடை விடுமுறைக்குப் பிறகு வழக்குகள் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்படும்” என்று தெரிவித்தார்.
தலைமை நீதிபதி ரமணா, நீதிபதிகள் சஞ்சய் கிஷண் கவுல், சுபாஷ் ரெட்டி, பி.ஆர்.கவாய், சூர்ய காந்த் அமர்வு வழக்கை விசாரிக்கிறது. இதில் சுபாஷ் ரெட்டி கடந்த ஜனவரியில் ஓய்வு பெற்றார். தலைமை நீதிபதி ரமணா வரும் ஆகஸ்ட் 26-ம் தேதி ஓய்வு பெறுகிறார். அவர்களுக்குப் பதிலாக புதிய நீதிபதிகள் அமர்வில் சேர்க்கப்பட வேண்டும்.
உச்ச நீதிமன்றத்துக்கு மே 23 முதல் ஜூலை 11 வரை கோடை விடுமுறை ஆகும். கோடை விடுமுறைக்குப் பிறகு வழக்கு விசாரிக்கப்படும் என்று தலைமை நீதிபதி கூறியிருப்பதால் வரும் ஜூலையில் விசாரணை தொடங்க உள்ளது.