கொடும்பாளூர் அருகே கிணற்றில் தவறி விழுந்த ஆட்டுக்குட்டியை மீட்க முயற்சி செய்த இளைஞர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
திருச்சியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வாகன ஒட்டுநராக பணிபுரிந்து வருபவர் மகாராஜன் (30). இவருக்கு மனைவி மற்றும் இரண்டு குழந்தைள் உள்ளனர். இந்நிலையில் வார விடுமுறை தினமான நேற்று தனது சொந்த ஊருக்கு வந்த மகாராஜன் தனக்குச் சொந்தமான ஆடுகளை வயல் பகுதிக்கு மேய்ச்சலுக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
அப்போது சிறிய ஆட்டுக்குட்டி வயலில் உள்ள கிணற்றில் தவறி விழுந்துள்ளது. அதை கயிறு கட்டி மீட்க முயற்சி செய்துள்ளார். அப்போது கயிறு அறுந்து நிலைதடுமாறிய மகாராஜன் கிணற்றுக்குள் விழுந்துள்ளார். நீண்ட நேரமாக மகாராஜன் மேலே வராததால் அருகே இருந்தவர்கள் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
தகவலின் பேரில் அங்கு வந்த தீயணைப்பு நிலைய அதிகாரிகள் கிணற்றுக்குள் இறங்கி மகாராஜனை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது மகாராஜன் கிணற்று நீரில் மூழ்கி உயிரிழந்தது தெரியவந்தது. இதையடுத்து இரண்டு மணி நேரத்திற்கு மேலாக போராடி மகாராஜன் உடலை மீட்ட தீயணைப்புத் துறையினர் அவரின் குடும்பத்தாரிடம் ஒப்படைத்தனர்.
.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM