சென்னை: கிராமந்தோறும் மரகதப் பூஞ்சோலைகள் ஏற்படுத்தப்படும் என்பது உள்ளிட்ட அம்சங்களுடன் தமிழக சட்டப்பேரவையில் வனத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின்போது அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.
தமிழக சட்டப்பேரவையில் இன்று நடந்த சுற்றுச்சூழல், வனத்துறை மீதான விவாதத்தின்போது, திண்டுக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களில் தேவாங்கு வன உயிரின சரணாலயம் ஏற்படுத்துதல், மின்சார இரு சக்கர வாகன பயன்பாட்டின் மூலம் பசுமையாக்கம், சென்னையில் கடல் ஆமைகள் பாதுகாப்பு மற்றும் மறுவாழ்வு மையம் ஏற்படுத்துதல், சூழல் சுற்றுலா சுற்றுத்தடங்கள் புதியதாக ஏற்படுத்துதல் என்பது உள்ளிட்ட பல்வேறு முக்கிய அறிவிப்புகளையும், அதற்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிதி விவரங்களையும் வனத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் அறிவித்தார். அவர் வெளியிட்ட 13 முக்கிய அறிவிப்புகள்:
> திருப்பூரில் உள்ள நஞ்சராயன் குளம் புதிய பறவைகள் சரணாலயமாக அறிவிக்கை செய்யப்படும்.
> கிராமந்தோறும் மரகதப் பூஞ்சோலைகள் ஏற்படுத்தப்படும்.
தமிழக அரசு, வனத்துறையின் முயற்சியாக இந்த ஆண்டில் 100 கிராமங்களில் மரகதப் பூஞ்சோலைகள் ஏற்படுத்தப்படும். வனத்தையொட்டியுள்ள கிராமங்களில் இப்பசுமை சோலைகள் ஏற்படுத்தப்படும். இவை ஒவ்வொன்றும் சுமார் ஒரு ஹெக்டேர் பரப்பளவைக் கொண்டிருக்கும். இந்த மரகதப் பூஞ்சோலைகள் உள்ளூர் கிராமத்தின் மரம் மற்றும் ஊரக விறகுத் தேவைகளை நிறைவேற்றுவதுடன், நீர்நிலையை மேம்படுத்தி சூழலியல் சேவைகளை வழங்குவதோடு பல்வேறு பொழுதுபோக்கு வசதிகளையும் வழங்கும். கிராமத்தின் பொது நலனுக்காக உள்ளூர் சமூகம் இந்த சோலைகளிலிருந்து பொதுப்பயன் உரிமைகளைப் பெற்றிருக்கும். இந்த மரகதப் பூஞ்சோலைகள் 100 ஹெக்டேர் பரப்பளவில் ரூபாய் 25 கோடி செலவில் உருவாக்கப்படும்.
> காவிரி தெற்கு வன உயிரின சரணாலயம் ஏற்படுத்தப்படும்.
> திண்டுக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களில் தேவாங்கு வன உயிரின சரணாலயம் ஏற்படுத்தப்படும்.
இந்தியாவின் முதல் தேவாங்கு வன உயிரின சரணாலயம் தமிழகத்தின் திண்டுக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களை உள்ளடக்கிய வனப்பகுதிகளில் அமைக்கப்படும். தேவாங்கு (Slender Loris) தென்னிந்திய தீபகற்ப வாழ்விடப் பகுதிகளில் காணப்படும் அரியவகை விலங்காகும். தேவாங்கு இயற்கை பாதுகாப்புக்கான சர்வதேச அமைப்பால் (IUCN) “அழியும் விளிம்பில் உள்ள இனம்” எனப் பட்டியலிடப்பட்டுள்ளது. தேவாங்கு வன உயிரின சரணாலய அறிவிப்பு இந்த அரிய இனத்தின் பாதுகாப்பு மற்றும் அறிவியல் பூர்வமான மேலாண்மைக்கு உதவும். இந்த அறிவிப்பிற்கான கணக்கெடுப்பு, மதிப்பீடுகளை உள்ளடக்கிய விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க இந்த ஆண்டில் ரூபாய் 5 கோடி அரசால் ஒதுக்கீடு செய்யப்படும்.
> மின்சார இரு சக்கர வாகன பயன்பாட்டின் மூலம் பசுமையாக்கம்.
தமிழக அரசு வனத்துறையின் முன்னோடி முயற்சியாக கள ஊழியர்களின் பயன்பாட்டிற்காக ரூபாய் 2.32 கோடி செலவில் 256 மின்சார இரு சக்கர வாகனங்களை கொள்முதல் செய்து வழங்க உள்ளது. இந்த நடவடிக்கையானது, கரிம மாசு நிறைந்த புதை படிவ எரி பொருட்கள் சார்ந்திருப்பதைக் குறைப்பதற்கும், வனப் பாதுகாப்பில் மாசற்ற மற்றும் பசுமையான ஆற்றலை மேம்படுத்துவதற்கும், வனத்துறையின் பங்களிப்பை வலுப்படுத்தும். இந்த முயற்சி ஜப்பானிய பன்னாட்டு கூட்டுறவு முகமை மற்றும் தமிழ்நாடு அரசு நிதியுதவியுடன் செயல்படுத்தப்படும், “காலநிலை மாற்றத்திற்கான பல்லுயிர்ப் பாதுகாப்பு மற்றும் பசுமைத்திட்டம்” மூலம் மேற்கொள்ளப்படும்.
> நீலக்கரிம உள்ளிருப்புக்கான முன்னெடுப்புகள் – அலையாத்தி காடுகள் மற்றும் பவளப்பாறைகள் பாதுகாப்பு
> சென்னையில் கடல் ஆமைகள் பாதுகாப்பு மற்றும் மறுவாழ்வு மையம் ஏற்படுத்தப்படும்.
> அடையாறு, கூவம் ஆறுகள் மற்றும் பக்கிங்ஹாம் கால்வாய் ஆகியவற்றின் கரைகளில் பசுமைத் தோட்டங்கள் ஏற்படுத்தப்படும்.
> சூழல் சுற்றுலா சுற்றுத்தடங்கள் புதியதாக ஏற்படுத்தப்படும்.
தமிழ்நாட்டில் மலைப்பகுதிகளில் உள்ள கீழ்க்கண்ட சூழல் சுற்றுலா பகுதிகள் உள்ளூர் சமூக பங்களிப்புடன் வனத்துறை
மூலம் செயல்படுத்தப்படும்.
- நீலகிரி மாவட்டம்,கேத்தரின் அருவி
- திண்டுக்கல் மாவட்டம் தலைக்குத்து அருவி, பரப்பலாறு அருவி.
- குரும்பப்பட்டி-ஏற்காடு.
- ஐயூர்-தேன்கனிக்கோட்டை-ஒக்கேனக்கல் அருவி.
- கொல்லிமலை – ஆகாயகங்கை நீர்வீழ்ச்சி – ஏலகிரிமலை.
- ஏலகிரி – அமிர்தி ஜமுனாமரத்தூர் பீமன் நீர்வீழ்ச்சி-குலர்குகை.
இச்சூழல் சுற்றுலா நடவடிக்கைகளை, நீடித்த நிலையான வகையில் மேற்கொள்ள, உள்ளூர் சமூகத்தின் திறன் மேம்பாடு மற்றும் பயிற்சியில் கவனம் செலுத்தப்படும். இத்திட்டத்தின் கீழ், மாவட்ட நிருவாகம் மற்றும் உள்ளூர் சமூகத்துடன் இணைந்து சூழல் சுற்றுலா மேலாண்மைத் திட்டத்தை உருவாக்குவதற்குத் தேவையான உள்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்படும். இத்திட்டம் ரூபாய் 14 கோடி செலவில் ஜப்பானிய பன்னாட்டு கூட்டுறவு முகமை மற்றும் தமிழக அரசு நிதியுதவியுடன் செயல்படுத்தப்படும், “காலநிலை மாற்றத்திற்கான பல்லுயிர்ப் பாதுகாப்பு மற்றும் பசுமைத்திட்டம்” மூலம் மேற்கொள்ளப்படும்.
> களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்தில் உயிர்ப்பன்மை – ஆய்வகம் மற்றும் சுற்றுலா மையம் ஏற்படுத்தப்படும்.
> வனப்பகுதிகளில் உள்ள அந்நியகளைத்தாவர இனங்கள் அகற்றப்படும்.
> வனத்துறையின் மேலாண்மை செயல்பாடுகள் மற்றும் சேவைகளில் புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்துதல்.
> நீலகிரி மாவட்டம், கோத்தகிரியில் சோலைக்காடுகள் பாதுகாப்பு மையம் அமைக்கப்படும்.