புதுடில்லி : கூடங்குளம் அணுமின் நிலையத்தில், அணு உலைக்கு வெளியே கழிவுகளை சேமிக்கும் கிடங்கு அமைக்க அளிக்கப்பட்ட கால அவகாசத்தை நீட்டிக்க கோரிய மனு மீதான விசாரணையை, உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்தது.
நெல்லை மாவட்டத்தில் உள்ள கூடங்குளம் அணுமின் நிலையத்தில், அணு உலைக்கு வெளியே கழிவுகளை பாதுகாக்கும் பெட்டகம் இல்லாததால், அணுமின் நிலையத்தை இயக்க தடை விதிக்குமாறு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், ‘அணுக் கழிவுகளைப் பாதுகாக்கும் பெட்டகத்தை அணு உலைக்கு வெளியே, 2022- ஏப்ரல் மாதத்திற்குள் அமைக்க வேண்டும்’ என, 2018ல் உத்தரவிட்டது.இதற்கான கால அவகாசம் இன்னும் சில தினங்களில் முடிவுக்கு வருவதை அடுத்து, இந்திய அணுமின் கழகம் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.அதில், ‘அணு உலைக்கு வெளியே அணுக் கழிவுகளை பாதுகாக்கும் பெட்டகத்தை அமைக்க அளிக்கப்பட்ட கால அவகாசத்தை, 2026 ஜூலை வரை நீட்டிக்க வேண்டும்’ என கோரப்பட்டு உள்ளது.
இது தொடர்பாக பதில் மனு தாக்கல் செய்ய கால அவகாசம் அளிக்குமாறு, மனுதாரர் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. அதை ஏற்ற நீதிபதிகள், வழக்கு விசாரணையை அடுத்த மாதம் 4ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.
Advertisement