கொரோனாவால் பாதிக்கப்படாத 2 தவணை கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களின் ரத்தத்தில் ஒமைக்ரானுக்கு எதிராக நடுநிலைப்படுத்தும் ஆன்டிபாடிகளின் சராசரி செறிவு 0.11 என்ற அளவில் மிக குறைவாக இருப்பது கண்டறியப்பட்டது.
கொரோனா தொற்றில் இருந்து நம்மை தற்காத்துக் கொள்ள தடுப்பூசி செலுத்தி கொள்வதுதான் ஒரே சிறந்த வழி என்று மத்திய, மாநில அரசுகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. இதன் பயனாக நாட்டில் மொத்தம் 90% மேற்பட்டவர்கள் முதல் தவணை கொரோனா தடுப்பூசியையும், 60% மேற்பட்டவர்கள் இரண்டாம் தவணை தடுப்பூசியையும் செலுத்தி கொண்டுள்ளனர்.
அதேசமயம், கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களில் குறிப்பிட்ட சதவீத மக்கள் தொற்றுக்கு ஆளாகி வருவதால், தடுப்பூசி செலுத்தி கொள்ளவதால் என்ன பயன்? என்ற கேள்வியும் மக்கள் மன்றத்தில் தொடர்ந்து எழுப்பப்படுகிறது. பொதுமக்களின் இந்த கேள்வி நியாயம்தான் என்பது போல அமைத்துள்ளது அண்மையில் வெளியாகி உள்ள ஓர் ஆய்வு முடிவு.
உருமாறிய கொரோனா ஒமைக்ரான் பிஏ 1 வைரசுக்கு எதிராக கோவிஷீல்டு, கோவேக்சின் ஆகிய தடுப்பூசிகள் எந்த அளவுக்கு செயல்படுகிறது என்பது தொடர்பாக, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் (
ஐசிஎம்ஆர்
) கீழ் இயங்கும் தேசிய நோய் நுண்ணுயிரியல் நிறுவனம் ஆய்வு மேற்கொண்டது.
அதில், ‘கொரோனாவால் பாதிக்கப்படாத இரண்டு தவணை கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களின் ரத்தத்தில் ஒமைக்ரானுக்கு எதிரான ஆன்டிபாடிகளின் சராசரி செறிவு 0.11 என்ற அளவிலேயே இருப்பதும் கண்டறியப்பட்டது.
இதுவே, கொரோனா பாதிப்பில் இருந்து மீண்ட பிறகு 2 தவணை கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு ஆன்டிபாடிகளின் செறிவு 11.28 என்ற அளவிலும், இரண்டு தவணை தடுப்பூசி செலுத்திய பிறகு கொரோனாவால் பாதிக்கப்பட்டு மீண்டவர்களுக்கு ஆன்டிபாடிகளின் சராசரி செறிவு 26.25 என்ற அளவிலும் இருப்பது தெரிய வந்தது.
ஒமைக்ரான் பிஏ 1 வகை கொரோனா, பொதுமக்களின் உடலில் உருவாக்கி இருக்கும் நோய் எதிர்ப்பு சக்தியில் இருந்து எளிதில் தப்பித்து பாதிப்பை ஏற்படுத்துவது போல பிஏ 2 வகை, தற்போதைய துணை உருமாறிய வைரஸ்களும் அவற்றின் திறனை பெற்றிருக்கலாம் என கணிக்கப்பட்டுள்ளது.
எனவே கோவிஷீல்டு, கோவேக்சின் கொரோனா தடுப்பூசிகளை இரண்டு தவணை செலுத்திக் கொண்டவர்களில், தேவைப்படுபவர்களஅ விரைவில் பூஸ்டர் தவணை தடுப்பூசியை செலுத்திக்கொள்வது மிகவும் அவசியம்’ என்று ஐசிஎம்ஆர் விஞ்ஞானிகள் அறிவுறுத்தி உள்ளனர்.