“மகாத்மா காந்தியை கொலை செய்த நாதுராம் கோட்சேவின் கொள்கையை நேரடியாக ஆதரிப்பவர் பிரதமர் நரேந்திர மோடி” என்று தெலங்கானா அமைச்சரும், டிஆர்எஸ் கட்சியின் செயல் தலைவருமான கே.டி. ராமாராவ் தெரிவித்துள்ளார்.
தெலங்கானாவில் ஆளும் டிஆர்எஸ் கட்சிக்கு போட்டியாக பாஜக வளர்ந்து வரும் சூழலில் கே.டி. ராமாராவ் இந்தக் கருத்தை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஹைதராபாதில் செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், “நாட்டில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரை அச்சுறுத்தும் விதமாகவும், அவர்களை பாதுகாப்பற்ற சூழலில் இருப்பதாக உணரச் செய்யும் வகையிலும் ஏராளமான வன்முறை சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. மிகவும் வெளிப்படையாக நடைபெறும் இச்சம்பவங்கள் குறித்து நாட்டின் பிரதமராக இருப்பவர் ஒரு பேச்சுக்கு கூட கண்டனம் தெரிவிப்பதில்லை. இதற்கு என்ன அர்த்தம்? அதுபோன்ற சம்பவங்களை அவர் அனுமதிக்கிறார். அனுமதிக்கிறார் என்றால் அதனை அவர் ஆதரிக்கிறார் என்றுதானே நம்மால் புரிந்துகொள்ள முடியும்.
மகாத்மா காந்தியை கொன்ற நாதுராம் கோட்சேவின் கொள்கையை நேரடியாக ஆதரிப்பவர் நரேந்திர மோடி. சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி கோட்சே. இதை கூறியதற்காக என்னை கைது செய்தாலும் பரவாயில்லை. நீங்கள் (நரேந்திர மோடி) இந்த நாட்டின் பிரதமர். பாஜக அல்லது ஆர்எஸ்எஸ் அமைப்பின் தலைவர் கிடையாது. இதனை கூறுவதற்கு எனக்கு உரிமை இருக்கிறது” என கே.டி. ராமாராவ் கூறினார்.
தெலங்கானாவில் முதல்வர் கே. சந்திரசேகர ராவின் மகன் கே.டி. ராமாராவ் என்பது குறிப்பிடத்தக்கது.
Courtesy: NewIndianExpressSource : WWW.PUTHIYATHALAIMURAI.COM