பெங்களூரு : கர்நாடகாவிலிருந்து, கோவாவுக்கு செல்லும் டாக்சி ஓட்டுனர்கள், எல்லையை கடக்க சிறப்பு உரிமம் பெற வேண்டும். இல்லையென்றால் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும்.அபராதம் முந்தைய வாரம், பெங்களூரிலிருந்து, கோவாவுக்கு பயணித்த 40 டாக்சிகள், எல்லையை தாண்ட சிறப்பு உரிமம் பெற்றிருக்கவில்லை.
இவர்கள் தலா 10 ஆயிரம் ரூபாய் அபராதம் செலுத்தினர்.பெங்களூரின் போக்குவரத்து அலுவலகங்கள் உட்பட மற்ற மாவட்டங்களில், ஆர்.டி.ஓ., அலுவலகங்கள் மாதக்கணக்கில் மூடப்பட்டிருந்ததால், டாக்சி ஓட்டுனர்களால் உரிமம் பெற முடியவில்லை.சிறப்பு உரிமம் பெற, கர்நாடக போக்குவரத்துத்துறை ‘ஆன்லைன்’ இணையதளம் வைத்திருக்கவில்லை. உரிமத்துக்காக ஓட்டுனர்கள் 100 — 200 ரூபாய் வரை செலவிட வேண்டும்.பெங்களூரின் சாந்திநகரில் உள்ள, ஆர்.டி.ஓ., அலுவலகம், மாநிலத்தின் மற்ற பகுதிகளின் ஆர்.டி.ஓ.,க்களில், சிறப்பு உரிமம் பெறலாம். சோதனைச்சாவடிகளிலும் கூட, டாக்சி ஓட்டுனர்கள் உரிமம் பெற வாய்ப்புள்ளது.அங்கு பெற்றுக்கொள்ளலாம் என கருதி, டாக்சி ஓட்டுனர்கள் கோவாவுக்கு புறப்படுகின்றனர். ஆனால் ஏப்ரல் துவக்கத்திலேயே, சோதனைச்சாவடிகளில் உரிமம் வழங்குவது நிறுத்தப்பட்டுள்ளது.அண்டை மாநிலங்கள் ஆந்திரா, கேரளாவில் ஆன்லைன் மூலம் சிறப்பு உரிமம் பெற முடியும். ஆனால் கர்நாடகாவில் இந்த வசதியில்லை. இதனால் சுற்றுலா பயணியர் பாதிப்படைகின்றனர்.டாக்சி ஓட்டுனர்களுக்கு விதிக்கப்படும் அபராத தொகையை, சுற்றுலா பயணியர் செலுத்த வேண்டிஉள்ளது.சிறப்பு உரிமம் வேன்கள், சுற்றுலா பஸ்களை போன்ற பெரிய வாகனங்களுக்கு கூடுதல் அபராதம் விதிக்கப்படுகிறது. சிறப்பு உரிமம் இல்லாத டாக்சிகளுக்கு 10 ஆயிரம் ரூபாய், வேன்களுக்கு 17 ஆயிரம் ரூபாய், சுற்றுலா பஸ்களுக்கு 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படுகிறது.கர்நாடக போக்குவரத்துத்துறை, ஏற்கனவே ஆன்லைனில் வாகனங்களுக்கு சிறப்பு உரிமம் வழங்கும் பணியை துவங்கியுள்ளது. ஆனால் சோதனைச்சாவடிகளுக்கு இன்னும் இணைப்பு ஏற்படுத்தாததால், பிரச்னை சரியாகவில்லை என கூறப்படுகிறது.
Advertisement