புதுடெல்லி: ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து 370வது சட்டப்பிரிவு கடந்த 2019ம் ஆண்டு ஆகஸ்ட் 5ம் தேதி ரத்து செய்யப்பட்டு லடாக் தனி யூனியன் பிரதேசமாக பிரிக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், ஜனாதிபதியின் அரசாணையை ரத்து செய்யக் கோரியும் 2019ம் ஆண்டு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு தலைமை நீதிபதி என்.வி ரமணா, நீதிபதிகள் சஞ்சய் கிஷன் கவுல், ஆர் சுபாஷ் ரெட்டி, பிஆர் கவாய் மற்றும் சூர்ய காந்த் ஆகியோர் அடங்கிய அரசியல் சாசன அமர்வில் பட்டிடலிடப்பட்டு விசாரிக்கப்பட்டது. கடந்த 2020, மார்ச் 2ம் தேதிக்கு பிறகு இவ்வழக்கு விசாரணைக்கு பட்டியலிடப்படாமல் உள்ள நிலையில், 5 நீதிபதிகள் ஒருவரான சுபாஷ் ரெட்டி கடந்த ஜனவரி மாதம் ஓய்வு பெற்றார். இந்த நிலையில் மூத்த வழக்கறிஞர் சேகர் நாப்டே, ‘இந்த வழக்கை அடுத்த வாரமே விரைந்து விசாரிக்க வேண்டும்’ என தலைமை நீதிபதி என்.வி ரமணா அமர்வில் நேற்று முறையிட்டார். இதனை ஏற்பதாக தெரிவித்த தலைமை நீதிபதி, அமர்வில் ஒரு புதிய நீதிபதி நியமனம் செய்யப்பட்டு, கோடை விடுமுறைக்கு பின்னர் வழக்கு விசாரிக்கப்படும் என ஒப்புதல் தெரிவித்தார்.