தமிழகத்தை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்ல முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தீவிரமாக செயல்படுகிறார் என்று துணை குடியரசுத் தலைவர் வெங்கய்யா நாயுடு தெரிவித்தார்.
சென்னை தாம்பரத்தில் உள்ள மெப்ஸ் சிறப்பு பொருளாதார மண்டலத்தில் அமைந்துள்ள காக்னிசண்ட் நிறுவனத்தில் சிறந்த ஏற்றுமதியாளர்களுக்கு விருது வழங்கும் விழா நடந்தது. இதில், குடியரசு துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடு, மத்திய அமைச்சர் அனுபிரியா படேல், அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமசந்திரம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் சிறந்த ஏற்றுமதியாளர்களுக்கு வெங்கய்யா நாயுடு விருதுகளை வழங்கி கவுரவித்தார். விழாவில் பேசிய மத்திய அமைச்சர் அனுபிரியா படேல், ‘பிரதமர் நரேந்திர மோடி ஏற்றுமதிக்கு அதிக முக்கியத்துவம் தருகிறார். உங்கள் மீதான எதிர்பாப்புகள் அதிகரித்துள்ளது.
கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு ஏற்றுமதியில் இந்தியா வரலாறு படைத்துக் கொண்டிருக்கிறது. 419 பில்லியன் அமெரிக்க டாலர் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. ஏற்றுமதியில் இந்தியா தனது இலக்கை அடைந்துள்ளது.
தமிழகத்தை பொறுத்தவரை, 2021-22 ஆம் ஆண்டு 130 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக ஊரக பகுதி மற்றும் பெண்களுக்கும் அதிக வேலைவாய்ப்பு கிடைப்பதாக தெரிவித்தார்.
இதையடுத்து குடியரசு துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடு பேசுகையில்… ‘ஏற்றுமதி தொழில் சார்ந்த நடவடிக்கைகளில் முடிவு எடுப்பதிலும், செயல்படுத்துவதிலும் காலதாமதம் இருக்கக்கூடாது என்பது இன்றைய காலகட்டத்தில் மிகவும் அவசியமான ஒன்றாகும். மத்திய மாநில அரசுகள், தொழில் துறையினருடன் இணைந்து செயல்பட வேண்டும்.
தொழில்துறையில் தமிழ்நாடு பெரிய மாநிலமாக விளங்குகிறது. தமிழகத்தை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்ல முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தீவிரமாக செயல்படுகிறார். தொழில்துறை உற்பத்திக்கான கட்டமைப்பை சிறந்த அளவில் பெற்றுள்ள மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது.
ஆட்டோமொபைல் மற்றும் வாகன உதிரி பாகங்கள், ஜவுளி, தோல் பொருள்கள், இலகு மற்றும் கனரக பொறியியல், பம்புகள் மற்றும் மோட்டார்கள், மின்னணு மென்பொருள்கள், மற்றும் ஹார்டுவேர் உற்பத்தியில் மிகப்பெரும் மையமாக தமிழகம் உருவெடுத்துள்ளது. ஆட்டோமொபைல் மற்றும் வாகன உதிரிபாகங்கள், தோல் பொருள்கள், மென்பொருள்கள் மற்றும் ஆயத்த ஆடை ஏற்றுமதியில் நாட்டிற்கே முன்னோடியாக தமிழகம் தொடர்ந்து வருகிறது.
வலுவான கட்டமைப்பு மற்றும் 4 சர்வதேச விமான நிலையங்கள், 3 மிகப்பெரும் கடல் துறைமுகங்கள், பல்வேறு சிறு கடல் துறைமுகங்கள் ஆகியவற்றுடன் கூடிய சிறந்த போக்குவரத்து வசதிகளுடன் நாட்டில் மூன்றாவது பெரும் ஏற்றுமதி மாநிலமாக தமிழகம் மாறியுள்ளது.
சென்னை – பெங்களூரு தொழில் வழித்தடம், சென்னை – கன்னியாகுமரி தொழில் வழித்தடம் ஆகியவை நிறைவடையும்போது மாநிலத்தின் பொருளாதார திறனில் மேலும் மாற்றம் ஏற்பட்டு, ஏற்றுமதிக்கான மிகப்பெரும் வாய்ப்புகளை ஏற்படுத்தும்.
புதிய கல்விக் கொள்கையால் மகிழ்ச்சி அடைவதாகவும், இளைஞர்கள் வர்த்தகத்தில் வருவதை ஊக்குவிக்க வேண்டும். தமிழக இளைஞர்கள் வெளிநாடுகளுக்குச் சென்று சர்வதேச நிறுவனங்களில் முன்னணி வகிக்கின்றனர், என்றார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM