புதுடெல்லி: சுருக்கு மடி வலைக்கு விதிக்கப்பட்டுள்ள தடைக்கு, இடைக்கால தடை உத்தரவு பிறப்பிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது. கடலில் மீன் உற்பத்தி வளத்தை அதன் குஞ்சு பருவத்திலேயே முழுமையாக அழிக்கும் சுருக்கு வலை, மடிப்பு வலை, இரட்டை மடிப்பு வலைகளை மீனவர்கள் பயன்படுத்தக் கூடாது என தமிழகம், கேரளா, ஆந்திரா, ஒடிசா, குஜராத், மகாராஷ்டிரா உள்ளிட்ட பல மாநிலங்களில் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதை எதிர்த்து ஞானசேகர் என்பவர் உட்பட 9 பேர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஜெய்சுகின் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ரிட் மனுவில், ‘‘தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களில் சுருக்கு மடி வலைக்கு தடை விதிக்கப்பட்டிருப்பது சட்ட விரோதம். அதற்கான தடையை ரத்து செய்ய வேண்டும்’’ என கூறி இருந்தார். இந்த வழக்கு நீதிபதி இந்திரா பானர்ஜி மற்றும் போபன்னா ஆகியோர் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தபோது, இந்த விவகாரம் தொடர்பாக ஒன்றிய அரசு மற்றும் தமிழக அரசு பதிலளிக்க நோட்டீஸ் பிறப்பிப்பதாக உத்தரவிடப்பட்டது. அப்போது குறுக்கிட்ட மனுதாரர் தரப்பு வழக்கறிஞர், ‘அரசு தரப்பில் பதிலளிக்கும் வரை சுருக்கு மடி வலை விவகாரத்தில் இடைக்கால தடை உத்தரவு பிறப்பிக்க வேண்டும்’ என கோரிக்கை வைத்தார். ஆனால் அதனை நீதிபதிகள் நிராகரித்து விட்டனர்.