சென்னை: சென்னையில் பாய்மரப் படகோட்டுதல் அகாடமி மற்றும் பாய்மரப் படகோட்டுதல் மற்றும் துடுப்புப் படகோட்டுதலுக்கான முதன்மை நிலை மையம் அமைக்க அரசு ரூ.7 கோடி ஒதுக்கியுள்ளதாக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக சட்டப்பேரவையில் இன்று வனத்துறை மற்றும் சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதங்கள் நடைபெற்றது. இதற்கு துறையின் அமைச்சர்கள் கா.ராமச்சந்திரன், சிவ.வீ.மெய்யநாதன் ஆகியோர் பதிலளித்து புதிய அறவிப்புகளை வெளியிட்டனர். முன்னதாக கேள்வி நேரத்தின்போது உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதிலளித்தனர். இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை கொள்கை விளக்கக் குறிப்பில், உயர் செயல்திறன் மையங்கள் குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்புகள்.
மலை மேலிடப் பயிற்சி மையம்
மலை மேலிடத்தில் பயிற்சி மேற்கொள்ளும்போது மேம்படுத்தப்பட்ட இதய செயல்பாடு, மேம்பட்ட தசை செயற்திறன் மற்றும் ஒட்டுமொத்த ஆரோக்கிய மேம்பாடு ஆகிய கிடைக்கின்றன. நமது உடலில் அதிக ஆக்சிஜன் பாய்வதால் மீட்பு நேரம் குறைகிறது. அதே நேரத்தில் வலிமை மற்றும் நீடித்து உழைக்கும் திறன் அதிகரிக்கிறது. போட்டிகளில் கலந்து கொள்வதற்கு முன்பாக மலை மேலிடத்தில் பயிற்சி மேற்கொள்வது நல்ல முடிவுகளைத் தரும். இதனைக் கருத்திற்கொண்டு, உதகமண்டலத்தில் ரூ.500 லட்சம் செலவில் மலை மேலிடப் பயிற்சி மையம் ஒன்று அமைக்கப்பட்டு வருகிறது. இது நாட்டிலேயே ஒரு தனித்துவமான மையமாகும். இங்கு ஆண்டு முழுவதும் மேற்கொள்ளத்தக்க வகையில் சாதகமான காலநிலை நிலவி வருகிறது.
பாய்மரப் படகோட்டுதல் அகாடமி மற்றும் பாய்மரப் படகோட்டுதல் மற்றும் துடுப்புப் படகோட்டுதலுக்கான முதன்மை நிலை மையம்
தமிழகம் 1,087 கி.மீ நீளமுள்ள கடற்கரையைக் கொண்டுள்ளது. இந்த சாதகமான நீண்ட கடற்கரை நீர் விளையாட்டுகளின் வளர்ச்சிக்கு மிக உகந்ததாகும். பாயமரப் படகோட்டுதல் மற்றும் துடுப்புப் படகோட்டுதல் ஆகிய இரண்டு நீர் விளையாட்டுகளில் ஒலிம்பிக் பதக்கம் வெல்லும் வாய்ப்புகள் அதிகமாகும். தமிழகத்தைச் சேர்ந்த 3 பாய்மரப் படகோட்டும் வீரர்கள் இந்தியா சார்பாக டோக்கியோ ஓலிம்பிக்ஸ் 2020-ல் கலந்துகொண்டுள்ளனர். இவைகள் அனைத்தையும் கருத்திற்கொண்டு, சென்னையில் பாய்மரப் படகோட்டுதல் அகாடமி மற்றும் பாய்மரப் படகோட்டுதல் மற்றும் துடுப்புப் படகோட்டுதலுக்கான முதன்மை நிலை மையம் அமைக்க அரசு ரூ.700 லட்சம் ஒதுக்கியுள்ளது.
கெனோயிங் மற்றும் கயாக்கிங்கிற்கான முதன்மை நிலை மையம்
ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கங்கள் வெல்ல பெருமளவு வாய்ப்புள்ள இதர நீர் விளையாட்டுகள் கெனோயிங் மற்றும் கயாக்கிங் ஆகும். மேலக்கோட்டையூரில் உள்ள தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலைக்கழக வளாகத்திற்கு அருகில் கெனோயிங் மற்றும் கயாக்கிங்கிற்கான முதன்மை நிலை மையம் அமைக்க அரசு ரூ.258.10 லட்சம் ஒதுக்கீடு செய்துள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.