சென்னை:
சென்னையில் ரயில் விபத்துக்குள்ளான சம்பவத்தில் ஓட்டுநர் மீது 3 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னை தாம்பரம் நோக்கி செல்வதற்காக சென்னை கடற்கரை ரயில் நிலைய பணிமனையிலிருந்து புறநகர் ரயில் ஒன்று கடற்கரை ரயில் நிலையத்தின் முதலாவது நடைமேடைக்கு வந்து கொண்டிருந்தது. ரயில் நிறுத்துமிடம் அருகே வந்த போது ரயிலில் இருந்த லோகோ பைலர் அதனை நிறுத்த முயற்சித்துள்ளார். அப்போது, கட்டுப்பாட்டை இழந்த ரயிலின் பிரேக் பிடிக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
இதனால் அதிர்ச்சியடைந்த ரயிலின் ஓட்டுநர் சங்கர் என்பவர் அதிலிருந்து குதித்து உயிர்தப்பிய நிலையில், வேகமாக சென்ற ரயில், பல தடுப்புகளை இடித்து தகர்த்துக் கொண்டு நடைமேடையில் மோதி நின்றது. இந்த விபத்தில் அந்த ரயில் என்ஜினுடன் இணைந்த முதல் பெட்டி சேதமடைந்தது.
இந்த விபத்து குறித்து சம்பவ இடத்திற்கு வந்த உயர் அதிகாரிகள், விபத்து நடந்த பகுதியை பார்வையிட்டு, விபத்து குறித்து ஓட்டுனரிடம் விசாரணை நடத்தினர்.
இந்நிலையில், ரயில் விபத்து தொடர்பாக ஓட்டுநர் மீது 3 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.