சென்னை: சூரியன் நேர் உச்சிக்கு வருவதால் உருவாகும் ‘நிழல் இல்லாத காட்சி’என்ற வானியல் நிகழ்வு சென்னையில் நேற்று தென்பட்டது.
குறிப்பிட்ட சில நாட்களில் சூரியன் நமது தலைக்கு நேராக மேலே இருக்கும் போது நிழல் எந்த பக்கமும் சாயாமல் காலுக்கு கீழே இருக்கும். இதை நிழல் இல்லாத நாள் என்று குறிப்பிடுகின்றனர்.
இந்த வானியல் அபூர்வ நிகழ்வு அந்தந்த இடத்தின் தீர்க்க ரேகைக்கு ஏற்ப வெவ்வேறு நாட்களில் நிகழும். சூரியனின் வடநகர்வு, தென் நகர்வை பொருத்து ஆண்டுதோறும் 2 முறை தென்படும். அதன்படி, இந்தஆண்டுக்கான முதலாவது நிழல் இல்லாத காட்சி சென்னை உட்பட பல இடங்களில் நேற்று தென்பட்டது.
இதுகுறித்த நேரடி விளக்க நிகழ்வு கோட்டூர்புரம் பிர்லா கோளரங்கத்தில் நேற்று நடைபெற்றது. மதியம் 12.07 மணிக்கு சூரியன் நேர் உச்சிக்கு வந்தபோது சில விநாடிகள் நிழல் இல்லாத காட்சி தென்பட்டது. பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், பொதுமக்கள் இதை ஆர்வத்துடன் கண்டுகளித்தனர். இதேபோல, பெங்களூருவில் 12.17 மணிக்கு நிழல் இல்லாத காட்சி தெரிந்தது.
இதுகுறித்து பெரியார் அறிவியல்தொழில்நுட்ப மைய அறிவியல் அலுவலர் இ.கி.லெனின் தமிழ்க்கோவன் கூறியபோது, ‘‘சென்னையில் அடுத்த நிழல் இல்லாத காட்சி ஆக.18-ம் தேதி தென்படும். Zero Shadow Day-ZSD என்ற செயலியை போனில் பதிவிறக்கம் செய்து, அதில் உங்கள் பகுதியை குறிப்பிட்டால் நிழல் இல்லாத காட்சி எப்போது தென்படும் என அறியலாம்’’ என்றார்.