மீரட்: சொத்து தகராறால் பொதுமக்கள் முன்னிலையில் இளைஞர் ஒருவரை அவரது 3 மாமன்கள் கழுத்து அறுத்துக் கொன்ற பயங்கர சம்பவம் உத்தரபிரதேசத்தில் நடந்துள்ளது. உத்தரபிரதேச மாநிலம் மீரட் நகரின் சரேரா சந்தையில் பொதுமக்கள் முன்னிலையில் இளைஞர் ஒருவர் நேற்று மாலை கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டார். அதிர்ச்சியடைந்த மக்கள் ஓட்டம் பிடித்தனரே தவிர, கொலையை தடுக்கத் துணியவில்லை. இந்த காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. தகவலறிந்த போலீசார், உயிருக்கு போராடிக் கொண்டிருந்த இளைஞர் சாஜித்தை மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால், அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர். முதற்கட்ட விசாரணையில், சாஜித்துக்கும் அவரது மாமாக்களுக்கும் இடையே சொத்து தகராறு இருந்ததாகவும், அதனால் ஆத்திரமடைந்த அவர்கள் சாஜித்தை கொன்றது தெரியவந்தது. தலைமறைவாக உள்ள சாஜித்தின் மாமாக்கள் ஷாஜாத், நவ்ஷாத், ஜாவித் ஆகியோரை தேடி வருன்றனர். இதுகுறித்து மீரட் எஸ்பி வினீத் பட்நாகர் கூறுகையில், ‘உள்ளூர் மக்களும், வழிப்போக்கர்களும் முயற்சி செய்திருந்தால் கொலையை தடுத்திருக்கலாம். லிசாரி கேட் பகுதியில் வசிக்கும் சாஜித், ஏதோ வேலைக்காக சரேரா நகருக்குச் சென்றிருந்தார். அப்போது பின்னால் வந்த அவரது மாமாக்கள் 3 பேர், சாஜித்தை பிடித்து கத்தியால் குத்திக் கொன்றனர். ரத்த வெள்ளத்தில் சரிந்த அவர், உயிருடன் போராடிக் கொண்டிருக்கும் போது, மீண்டும் கத்தியால் தாக்கி அவரது கழுத்தை அறுத்துக் கொன்றுள்ளனர். சிசிடிவி ஆதாரத்தின் அடிப்படையில் குற்றவாளிகளை தேடி வருகிறோம்’ என்றார்.