ஜம்மு: ஜம்முவின் சஞ்சுவான் பகுதியில் நடந்த தாக்குதலில் தொடர்புடைய தீவிரவாதிகளுக்கு உதவியதாக 2 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
தேசிய உள்ளாட்சி அமைப்பு தினத்தையொட்டி பிரதமரின் வருகையால் ஜம்மு காஷ்மீரில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. எல்லை பகுதிகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருந்தது. இதேபோல கண்காணிப்பும் தீவிரப்படுத்தப்பட்டு இருந்தது.
இந்நிலையில், வரலாறு காணாத பாதுகாப்பையும் மீறி ஜம்முவில் நேற்று குண்டுவெடிப்பு நடந்தது. பிரதமர் மோடி அங்கு செல்லும் முன்பு இந்த குண்டு வெடிப்பு நிகழ்ந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதற்கிடையே 2 நாட்களுக்கு முன்பு ஜம்முவின் சஞ்சுவான் ராணுவ முகாம் அருகே தற்கொலை படை தாக்குதல் நடத்த முயன்ற 2 தீவிரவாதிகளை பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றனர். இந்நிலையில் தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்ட பகுதியை தேசிய புலனாய்வு முகமையின் (என்ஐஏ) தலைவர் குல்தீப்சிங் ஆய்வு செய்தார்.
இதைத் தொடர்ந்து, குல்காம் அருகே உள்ள மிர்ஹாமா பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படை வீரர்களுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து பாதுகாப்புப் படை வீரர்கள் அங்கு சென்றபோது பதுங்கி இருந்த தீவிரவாதிகள் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர். பாதுகாப்பு படை வீரர்கள் பதில் தாக்குதலில் ஈடுபட்டனர். இரு தரப்பினர் இடையே பயங்கர துப்பாக்கி சண்டை நடந்தது.
பாதுகாப்புப் படை வீரர்கள் நடத்திய அதிரடி தாக்குதலில் 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இவர்கள் பாகிஸ்தானின் ஜெய்ஷ்-இ-முகமது இயக்கத்தை சேர்ந்தவர்கள் எனத் தெரியவந்துள்ளது.
இதற்கிடையே சஞ்சுவான் ராணுவ முகாம் அருகே நடந்த என்கவுண்ட்டர் தொடர்பாக 2 பேரை போலீஸார் நேற்று கைது செய்தனர். சுட்டுக் கொல்லப்பட்ட 2 தீவிரவாதிகளுக்கு இவர்கள் உதவியதாக கூறப்படுகிறது.
பிரதமரின் வருகையை தடுக்க
இதுகுறித்து ஜம்மு-காஷ்மீர் கூடுதல் போலீஸ் டிஜிபி முகேஷ்சிங் செய்தியாளர்களிடம் கூறியதாவது: குல்காமில் தாக்குதல் நடத்தி பெரும் சேதத்தை விளைவிக்க தீவிரவாதிகள் முயன்றுள்ளனர். இதனால் பிரதமரின் வருகை தடைபடும் என அவர்கள் நினைத்துள்ளனர்.
22-ம் தேதி நடந்த சஞ்சுவான் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள் எனத்தெரியவந்துள்ளது. பிரதமரின் ஜம்மு பயணத்தை முடக்குவதுதான் அவர்களின் எண்ணமாக இருந்துள்ளது.
இந்நிலையில் தீவிரவாதிகளுக்கு உதவியதாக 2 பேரை கைது செய்துள்ளோம். இவர்கள் 2 பேரும் புதிதாக காஷ்மீருக்குள் ஊடுருவி வந்தவர்கள் எனத் தெரிகிறது. இவர்கள் காஷ்மீரி மொழியோ, இந்தி மொழியோ, டோக்ரி மொழியோ பேசவில்லை. அவர்கள் பஷ்தோ என்ற மொழியைப் பேசுகின்றனர். இவர்கள் பாகிஸ்தானின் கைபர் பக்துன்கவா அல்லது ஆப்கானிஸ்தானில் இருந்து வந்திருக்கக்கூடும்.
சாம்பா பகுதியில் காய்கறி ஏற்றி வரப்பட்ட லாரியிலிருந்து இவர்களைக் கைது செய்தோம். கைது செய்யப்பட்டவர்கள் ஷேக்,இக்பால் அகமது எனத் தெரியவந்துள்ளது. வரும் நாட்களில் இந்த வழக்கு தொடர்பாக மேலும் சிலரைக் கைது செய்யவுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.
– பிடிஐ