மதுரை: தமிழக ஆளுநரை யூடியூப் சேனல் ஒன்றில் இழிவாக பேசிய புகாரில் வழக்கறிஞர் பசும்பொன்பாண்டியன் என்பவரை மதுரை போலீஸார் கைது செய்தனர்.
மதுரை பிபி.சாவடி பல்லவன் நகர் 3-வது தெருவைச் சேர்ந்த அண்ணா திராவிட மக்கள் முன்னேற்றக் கழகம் என்ற கட்சியின் நிறுவனத் தலைவரான வழக்கறிஞர் பசும்பொன்பாண்டியன்(56) தனியார் டிவியின் யூடியூப் சேனலுக்கு பிப்.4-ம் தேதி அளித்த பேட்டியில் ஆளுநருக்கு எதிராக கண்ணியக் குறைவாகவும் இழிவான வார்த்தைகளையும் பேசியுள்ளார்.
ஆளுநருக்கு எதிராக மக்களைத் தூண்டி கலகம் ஏற்படுத்தும் வகையில் இப்பேச்சு அமைந்துள்ளதால் அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, மதுரை நகர் நுண்ணறிவு பிரிவின் கீழ் செயல்படும் சமூக ஊடகப் பிரிவைச் சேர்ந்த சார்பு ஆய்வாளர் எஸ்.சர்மிளா கரிமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், கலவரத்தை தூண்டுதல் உட்பட 4 பிரிவுகளில் அவர் மீது வழக்கு பதிவு செய்து அவரை நேற்று கைது செய்து மத்திய சிறையில் அடைத்தனர்.
பசும்பொன்பாண்டியன் மீது ஏற்கெனவே கரிமேடு, அண்ணா நகர், செல்லூர், திலகர் திடல், புதூர், ஜெய்ஹிந்த்புரம், எஸ்.எஸ். காலனி உள்ளிட்ட காவல் நிலையங் களில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பதாகப் போலீஸார் கூறினர்.