தமிழகத்தில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து, அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்துகிறார்.
டெல்லியிலும், ஹரியானா, உத்தரப்பிரதேச மாநிலங்களிலும் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்துள்ளது. தமிழகத்தில் பாதிப்பு அதிகம் இல்லை என்றாலும் மற்ற மாநிலங்களில் பாதிப்பு அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு முன்னெச்சரிக்கையாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சென்னை தலைமை செயலகத்தில் இன்று அமைச்சர்கள், சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்கிறார்.
கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுடனான இக்கூட்டத்தில் முதலமைச்சர் ஆலோசனை நடத்த உள்ளார்.
இதனிடையே, கொரோனா நான்காம் அலை இன்னும் தொடங்கவில்லை எனவும் மக்கள் அச்சப்பட தேவையில்லை எனவும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
மாவட்ட ஆட்சியர்களுக்கு மருத்துவத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் எழுதிய கடிதத்தில், கொவரோனா அறிகுறி உள்ளோருடன் தொடர்பில் இருந்தவர்களும் பரிசோதனை செய்து கொள்ளவும், பரிசோதனை முடிவு வரும் வரை தனிமைப்படுத்திக்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை குறித்து அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி நாளைமறுநாள் ஆலோசனை நடத்த இருப்பது குறிப்பிடத்தக்கது.