தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்திருப்பதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றம் சாட்டியுள்ளார்.
சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவகலத்தில் செய்தியாளர்களிடம் பேசம்சிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், இந்த விடியாத தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்ற நாளிருந்து கட்டப்பஞ்சாயத்து, அராஜகம் என இதுதான் கடந்த 10 மாதங்களாக தமிழகத்தில் தலைவிரித்தாடுகிறது.
பொதுமக்கள் சுதந்திரமாக இல்லை. தி.மு.க.வைச் சேர்ந்த உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் பொதுமக்களை மிரட்டுவதும், கட்டப்பஞ்சாய்த்து செய்வதும் எங்கு பார்த்தாலும் சர்வசாதாரணமாக நடக்கிறது.
இது ஒரு பக்கம் என்றால் ஆளுநர் முதல் காவல்துறை வரை பாதுகாப்பு இல்லை. ஆளுநர் என்பவர் அரசியலமைப்பு சட்டத்தின்படி மாநில நிர்வாகத்தின் தலைவர். அப்படிப்பட்டவருக்கே பாதுகாப்பு இல்லை. குறிப்பாக காவல்துறைக்கே பாதுகாப்பு இல்லை.
போக்குவரத்தினை சீர்படுத்திக்கொண்டிருக்கிற காவலரை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனின் உதவியாளர் கன்னத்தில் அறைகிறார். அதேபோல் ராயபுரத்தில் காவல்துறையினரை கேவலமான வார்த்தைகளால் ஒருவர் திட்டுகிறார்.
இது சமூக வலைதளங்களில் இன்றைக்கு எங்கு பார்த்தாலும் பரவி இருக்கிறது. காவல்துறைக்கு இது ஒரு பரிதாபமான நிலை.
இவற்றையெல்லாம் முதலமைச்சர் ஸ்டாலின் தொடர்ந்து வேடிக்கை பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார். அதனால்தான் தி.மு.க.வினர் தொடர்ந்து அராஜகத்தில் ஈடுபடுகின்றனர்.
தென்மாவட்டத்தில் காவல்துறையை சார்ந்த ஒரு பெண் உதவி ஆய்வாளர் கடுமையாக வெட்டப்பட்டுள்ளார். ஆனால் இந்த சம்பவத்திற்கு பிறகு காவலர்கள் யாரும் தனியாக போக வேண்டும் என காவல்துறை அறிவுறுத்துகிறது. இதிலிருந்து அவர்களுக்கே பாதுகாப்பு இல்லை என்பது தெளிவாகிறது.
அதிமுக ஆட்சியில் அமைதிப் பூங்காவாக இருந்த தமிழகம் தற்போது தி.மு.க. ஆட்சியில் அமலி பூங்காவாக மாறியிருக்கிறது. இவற்றையெல்லாம் பார்க்கும் இந்திய அரசியலமைப்பு சட்டப்பரிவு 356வது பிரிவை நோக்கி தமிழகம் செல்கிறது என்பது தெரிகிறது.
சட்டம் ஒழுங்கு சீர்குலைவு ஒருபுறம் என்றால் லாக்கப் மரணங்கள் எல்லாம் தொடர்ந்து அரங்கேறி வருகிறது. ராமநாதபுரம் மாவட்டத்தில் விசாரணைக்கு அழைத்துச் சென்றவர் மரணமடைந்தார். அதனைத் தொடர்ந்து மற்றொரு லாக்கப் மரணம் நடந்திருக்கிறது. இச்சம்பவம் முழுமையாக வெளியே தெரியவில்லை.
பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக ஒரு லட்சம் கொடுத்து செய்தி பரவாமலும் வெளியே கசியாமல் இருக்க வேண்டிய வேலையை பார்த்திருக்கிறார்கள். ஊடங்கள் இவற்றையெல்லாம் வெளிப்படுத்தி தங்களது ஜனநாயக கடமையை ஆற்ற வேண்டும்.
இதுபோன்ற லாக்கப் மரணங்களை காவல்துறை மூலம் விசாரிக்காமல் ஓய்வு பெற்ற நீதிபதிகள் மூலம் விசாரித்தால் எதிர்காலத்தில் இத்தகைய சம்பவங்கள் நடைபெறாது. மேலும் தி.மு.க. அரசின் சட்டம் ஒழுங்கு சீர்குலைவினை அதன் கூட்டணி கட்சிகள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்.
எந்த ஒரு கண்டனத்தையும் இவர்கள் தெரிவிப்பவதில்லை. மாறாக துதி பாடுகிறார்கள். இத்தகைய அரசியல் கட்சிகளை மக்கள் நிராகரிக்கக் கூடிய சூழ்நிலைதான் வரும்.
தமிழகத்தைப் பொறுத்தவரை தி.மு.க. ஆட்சிக்கு வந்த எல்லா காலகட்டத்திலும் மின்வெட்டு இருந்தது. காரணம் மக்கள் நலனைப் பற்றி தி.மு.க.வினருக்கு எந்த ஒரு அக்கறையும் கிடையாது.
மேலும் செயற்கையான ஒரு மின்சார தட்டுப்பாட்டினை ஏற்படுத்தி அதன் மூலம் பவர் பர்ச்சஸ் அக்ரிமெண்ட் (பிபிஏ) கொண்டுவந்து அதன் மூலம் பல கோடி ரூபாய்க்கு ஊழல் செய்வதற்கான முத்தாய்ப்பான வேலைகள் நடந்துகொண்டிருக்கிறது.
2113 கோடி ரூபாய்க்கு இன்றைக்கு மின்சாரம் வாங்கப்பட்டுள்ளது. அதிமுக ஆட்சியில் மின்சார தேவையை கருத்தில் கொண்டு அதற்கான திட்டங்களை வகுத்து மின்சார தட்டுப்பாடு இல்லாமல் பார்த்துக்கொள்ளப்பட்டது. ஆனால் இவர்கள் மத்திய அரசாங்கத்தை குறை கூறிக்கொண்டிருக்கிறார்கள் என்று தெரிவித்தார்.