சென்னை:
தமிழகம் முழுவதும் பிளஸ்-1, பிளஸ்-2 பொதுத்தேர்வு மாணவர்களுக்கு செய்முறை தேர்வு இன்று தொடங்கியது. பொதுத் தேர்வு அடுத்த மாதம் முதல் வாரத்தில் தொடங்க உள்ள நிலையில், செய்முறை தேர்வு 2 கட்டங்களாக நடக்கிறது.
சென்னை மாவட்டத்தில் பிளஸ்-1, பிளஸ்-2 வகுப்புகளுக்கான செய்முறை தேர்வுகள் இன்று முதல் மே 2-ந்தேதி வரை நடக்கிறது. முதல் சுற்று இன்று (25-ந்தேதி) முதல் 28-ந்தேதி வரையும், இரண்டாவது சுற்று 28-ந்தேதி முதல் மே 2-ந் தேதி வரையும் நடைபெறுகிறது.
செய்முறை தேர்வுகளுக்காக குறைக்கப்பட்ட பாடத்திட்டம் மற்றும் மாதிரி வினாத்தாள்கள், மதிப்பெண்கள் ஒதுக்கீடு ஆகியவை பாடவாரியாக சென்னை முதன்மை கல்வி அலுவலக இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
செய்முறை தேர்வுகள் 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு காலை 8 மணி முதல் 10 மணி வரை, 10.15 மணி முதல் 12.15 மணி வரை, 12.45 மணி முதல் மதியம் 2.45 மணி வரை, 3 மணி முதல் 5 மணி வரை செய்முறை தேர்வு நடக்கிறது. செய்முறை தேர்வுக்கான கால அளவு 2 மணி நேரமாக குறைக்கப்பட்டுள்ளது.
செய்முறை தேர்வுகள் நடக்கும் நாட்களில் விடைத்தாள்கள் அன்றே திருத்தப்பட்டு மதிப்பெண் பட்டியல் முதன்மை கண்காணிப்பாளர்களிடம் ஒப்படைக்கப்படும்.
சென்னை மாவட்டத்தில் 25 ஆயிரம் மாணவ-மாணவிகள் செய்முறை தேர்வு எழுதுகின்றனர்.