ஹைதராபாத்: காங்கிரஸ் கட்சியில் சேருவதற்காக கட்சித் தலைவர் சோனியா காந்தியுடன் ஆலோசனை நடத்தி வரும் தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோரின் ஐபேக் நிறுவனம் தெலங்கானா மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் தெலங்கானா ராஷ்ட்ர சமிதி கட்சிக்கு பணியாற்ற ஒப்பந்தம் செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கு வங்கம், தமிழகம், டெல்லி என பல மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் பணியில் பங்கேற்று வெற்றி கண்ட பிரசாந்த் கிஷோர், காங்கிரஸில் இணையப்போவதாக தகவல்கள் வெளியாகின. ராகுல், பிரியங்கா உள்ளிட்டோரை பலமுறை சந்தித்துப் பேசினார். ஆனால் காங்கிரஸில் இணையவில்லை.
அதன் பிறகு அவர் காங்கிரஸ் கட்சியையும், நேரு குடும்பத்தினரையும் கடுமையாக விமர்சித்து வந்தார். அதுமட்டுமின்றி பாஜகவை வரும் 2024-ம் ஆண்டு தேர்தலில் வெல்லும் திறன் காங்கிரஸுக்கு இல்லை எனவும், எதிர்க்கட்சிகளின் சார்பில் பிரதமர் பதவிக்கு நேரு குடும்பத்தினரே இருக்க வேண்டிய தேவையில்லை எனவும் காட்டமாக விமர்சித்து வந்தார்.
இந்தநிலையில் திடீர் திருப்பமாக பிரசாந்த் கிஷோர், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் கே.சி.வேணுகோபால் ஆகியோரை சந்தித்துப் பேசினார். அதன் தொடர்ச்சியாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை பலமுறை சந்தித்து பேசினார். அவரை கட்சியில் சேர்ப்பது தொடர்பாக மூத்த தலைவர்களுடன் பல சுற்று பேச்சுவார்த்தையை சோனியா காந்தி நடத்தியுள்ளார்.
இந்நிலையில் தெலங்கானாவில் காங்கிரஸுக்கு தீவிர எதிர் அரசியல் செய்து வரும் ஆளும் டிஆர்எஸ் எனப்படும் தெலங்கானா ராஷ்ட்ர சமிதி கட்சியுடன் பிரஷாந்த் கிஷோரின் ஐபேக் நிறுவனம் சட்டப்பேரவைத் தேர்தல் பணியாற்ற ஒப்பந்தம் செய்துள்ளது. இதுதொடர்பான ஒப்பந்தம் பிரஷாந்த் கிஷோரின் ஐபேக் நிறுவனத்திற்கும் டிஆர்எஸ் கட்சிக்கும் இடையே ஹைதராபாத்தில் கையெழுத்தானது.
அடுத்தாண்டில் நடைபெறும் தெலங்கானா சட்டப்பேரவை தேர்தலில் டிஆர்எஸ் கட்சியின் வியூகத்தை ஐபேக் நிறுவனம் கவனித்துக் கொள்ளும். எனினும் டிஆர்எஸ் கட்சிக்கான வெற்றி வியூகங்களை பிரஷாந்த் கிஷோர் நேரடியாக வழங்க மாட்டார் என்றும், அவரது ஐபேக் நிறுவனம்தான் வழங்கும் என்றும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியில் சேரும் பிரசாந்த் கிஷோர் தெலங்கானா ராஷ்ட்ர சமிதிக்கு ஆலோசனை வழங்குவதை அம்மாநில காங்கிரஸ் தலைவர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.