மதுரை ரயில்வே கோட்டம் ஞாயிற்றுக்கிழமை அன்று திருநெல்வேலி ரயில் நிலையத்தில், இந்திய ரயில்வேயின் “ஒரு நிலையம் ஒரு பொருள்” என்ற திட்டத்தின் கீழ் 15 நாள்கள் நடைபெறும் பனை பொருட்கள் விற்பனை கண்காட்சியை தொடங்கி வைத்தது.
ரயில்வே அதிகாரிகள் கூற்றுப்படி, உள்ளூர் தயாரிப்புகளை ஊக்குவிக்கும் நோக்கில் “ஒரு நிலையம் ஒரு பொருள்” என்கிற திட்டத்தை இந்திய ரயில்வே கையில் எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் கீழ் உள்ளூர் கைத்தறி பொருட்கள் மற்றும் மதுரையின் புகழ்பெற்ற சுங்குடி சேலைகள் மதுரை ரயில் நிலையத்தில் முன்பு விற்பனை செய்யப்பட்டன. இதற்காக ரயில் நிலையத்தில் முக்கியமான பகுதியில் 15 நாள்களுக்கு இலவச மின்சார வசதியுடன் இடம் வழங்கப்பட்டது.
திருநெல்வேலி ரயில் நிலையத்தில் பனை பொருட்கள் விற்பனை துவங்க விருப்ப மனுக்களை சமர்ப்பிக்க மதுரை ரயில்வே கோட்டம் வேண்டுகோள் விடுத்திருந்தது. அதன்பேரில், சமர்ப்பிக்கப்பட்ட விருப்ப மனுக்களிலிருந்து திருநெல்வேலி மாவட்ட கூட்டுறவு பனை உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு தேர்வு செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
சங்கச் செயலர் எஸ்.கற்பகவிநாயகம் கூறுகையில், “பனை வெல்லம், பனங்கற்கண்டு,பதநீர், மிட்டாய், பனை அல்வா, பனங்கிழங்கு, பனை ஓலையால் செய்யப்பட்ட கூடை, தொப்பி, கையால் செய்யப்பட்ட சோப், தேன், சுக்குகாப்பி ஆகியவை விற்பனைக்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. பயணிகள் பனை மரத்தில் செய்யக்கூடிய சுவையான உணவுகளை ருசிக்குமாறு நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்” என்றார்.
திருநெல்வேலி ரயில் நிலையத்தில் மே 8 வரை விற்பனை கண்காட்சி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.