திருப்பதி :
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் மாற்றுத் திறனாளிகள், மூத்த குடிமக்கள் மே மாதம் தரிசனம் செய்வதற்கான ஆன்லைன் டிக்கெட், நாளை வெளியிடப்படுவதாக தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் மே மாதம் தரிசனம் செய்வதற்காக மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் நீண்டகால தீராத நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்வதற்கான கோட்டா நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணிக்கு வெளியிடப்பட உள்ளது.
இந்த டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொண்ட பக்தர்கள் தினமும் காலை 10 மணிக்கும், வெள்ளிக்கிழமைகளில் மட்டும் மாலை 3 மணிக்கு தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட உள்ளனர்.
தரிசனம் செய்ய வரும், மூத்த குடிமக்கள் வயது சான்றிதழ், மாற்றுத்திறனாளிகளுக்கான சான்றிதழ், நீண்ட கால தீராத நோய் உள்ளவர்கள் மருத்துவ சான்றிதழை கட்டாயம் கொண்டு வர வேண்டும்.
பக்தர்கள் இதை கவனத்தில் கொண்டு டிக்கெட் முன்பதிவு செய்யுமாறு தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பதியில் நேற்று 67,347 பக்தர்கள் தரிசனம் செய்தனர். 29,440 பேர் முடிகாணிக்கை செலுத்தினர். ரூ.4.28 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.
வைகுண்ட காம்ப்ளக்ஸ்சில் 3 அறைகளில் இலவச தரிசன பக்தர்கள் தரிசனத்திற்காக காத்திருக்கின்றனர். 4 மணி நேரத்தில் பக்தர்கள் ஏழுமலையானை தரிசனம் செய்தனர்.
இதையும் படிக்கலாம்….திருச்சூர் பூரம் விழாவுக்கு கட்டுப்பாடுகள் நீக்கம்: வாண வேடிக்கை நடத்தவும் அனுமதி