தட்சிண கன்னடா : கட்டீல் துர்கா பரமேஸ்வரி கோவில் திருவிழாவில், இரண்டு கிராம மக்கள் ஒருவர் மீது மற்றொருவர் தீப்பந்தங்களை வீசும் வினோதநிகழ்ச்சி நடந்தது.தட்சிண கன்னடா மாவட்டம், மங்களூரில் இருந்து 28 கி.மீ., தொலைவில் உள்ள கட்டீல் என்ற கிராமத்தில் பிரசித்தி பெற்ற துர்கா பரமேஸ்வரி கோவில் அமைந்துள்ளது.
இந்த கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் தேர்த்திருவிழா நடப்பது வழக்கம். கொரோனாவால் இரண்டு ஆண்டுகளாக எளிமையாக நடத்தப்பட்டது.இந்தாண்டு தொற்று பரவல் குறைந்ததால், விமரிசையாக நேற்று முன்தினம் இரவு கொண்டாடப்பட்டது.விழாவின் ஒரு அங்கமாக காலம் காலமாக நடத்தி வருவது போன்று, அட்டூர் – கொடத்துார் கிராம மக்கள் தென்னை மட்டைகளில் தீப்பந்தம் ஏந்தி ஒருவர் மீது ஒருவர் தாக்கி கொண்டனர்.பின்னர் கோவில் வளாகத்தில் புனித நீராடினர். யாருக்கும் தீக்காயம் ஏற்படாதது சிறப்பு. இது அவர்களின் பாரம்பரிய நம்பிக்கை என்பது குறிப்பிடத்தக்கது. சிலர் நேர்த்திக்கடனுக்காக செய்வர். விழாவை திரளான பக்தர்கள் கண்டுகளித்தனர்.
Advertisement