தமிழகத்திலுள்ள பல்கலைக்கழகங்களில் துணைவேந்தரை மாநில அரசே நியமிக்க வழிவகை செய்யும் புதிய சட்ட மசோதா சட்டப்பேரவையில் நிறைவேறியது.
தமிழகத்திலுள்ள மாநில பல்கலைக்கழகங்களில், மாநில அரசே துணைவேந்தரை நியமிக்க ஏதுவாக பல்கலைக்கழக சட்டத்தில் திருத்தம் கொண்டு வரும் சட்ட முன்வடிவை சட்டப்பேரவையில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தாக்கல் செய்தார். இதனை தொடர்ந்து மசோதா குறித்து விளக்கமளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மாநில அரசுக்கு கீழ் இயங்கும் பல்கலைக்கழகங்களில் துணை வேந்தர்களை நியமிக்கக் கூடிய அதிகாரம் அரசுக்கு இல்லாமல் இருப்பது உயர்கல்வியில் பெரும் தாக்கத்தையும், குளறுபடிகளையும் ஏற்படுத்துவதாக கூறினார்.
கடந்த 4 ஆண்டுகளில் பல்கலைக்கழக துணைவேந்தர்கள் நியமனத்தில் ஆளுநர் தனக்கு மட்டுமே பிரத்யேக உரிமை இருக்கிறது போல் அரசை மதிக்காமல் செயல்படுவதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
மேலும், குஜராத், தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் தேர்வு குழு பரிந்துரைத்த மூன்று பேரில் ஒருவரை மாநில அரசு தான் துணைவேந்தராக நியமிக்கிறது எனவும், அதேபோல கர்நாடகாவில் மாநில அரசின் ஒப்புதலுடன் தான் துணைவேந்தர் நியமிக்கப்படுவதாகவும்முதலமைச்சர் குறிப்பிட்டார்.
இந்த நிலையில், துணைவேந்தர் நியமனம் தொடர்பான மசோதாவை ஆரம்ப நிலையிலேயே எதிர்ப்பதாக கூறி அதிமுகவும், பா.ஜ.க.வும் வெளிநடப்பு செய்த நிலையில், குரல்வாக்கெடுப்பு மூலம் மசோதா நிறைவேறியதாக சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார். பல்கலைக் கழகங்களின் துணைவேந்தர்களை இதுநாள் வரையில் ஆளுநரே நியமித்து வரும் நிலையில், அந்த அதிகாரத்தை அரசுக்கு மாற்றும் சட்ட மசோதாவை நிறைவேற்றி அதை ஆளுநரின் ஒப்புதலுக்கே தமிழக அரசு அனுப்பி வைக்கவுள்ளது.