திருவாரூர் மாவட்டம் கோட்டூர் அருகே உள்ள மேல கண்டமங்கலம் பிள்ளையார் கோயில் தெருவில் வசித்து வருபவர் சுரேஷ். இவருடைய மனைவி ராதிகா. இவர்களுக்கு இரு மகள்கள். கடந்த 6 மாதங்களுக்கு முன்பு ராதிகா தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். தன் மனைவி ராதிகாவின் மரணத்துக்கு மேல கண்டமங்கலத்தில் உள்ள தனது வீட்டின் எதிர்வீட்டில் வசிக்கும் கணேசன் என்பவரின் மகன் முருகேசன்தான் காரணம் என சுரேஷ் குற்றம்சாட்டிய நிலையில், அவர் மீது மிகுந்த கோபத்தில் இருந்திருக்கிறார். இதற்கிடையே தன் மனைவியை இழந்து மிகுந்த மனவேதனையில் தவித்துவந்த சுரேஷ், தன் 2 மகள்களுடன் தென்கோவனூரில் உள்ள தனது மாமனார் வீட்டில் தங்கியிருந்தார்.
இந்த நிலையில்தான், மேல கண்டமங்கலத்தில் சுரேஷ் வீட்டுக்கு எதிரில் வசித்துவந்த முருகேசன், அந்தப் பகுதியில் உள்ள கடைத்தெருவில் கொடூரமாக தாக்கப்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் கிடந்திருக்கிறார். இதைக்கண்ட அந்தப் பகுதி மக்கள், முருகேசனை மீட்டு மன்னார்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
பின்னர் அவர் அங்கிருந்து உயர் கிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சைப் பலனின்றி முருகேசன் பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாக விசாரணை மேற்கொண்ட கோட்டூர் காவல்துறையினர், 6 மாதங்களுக்கு முன்பு தற்கொலை செய்துகொண்ட ராதிகாவின் கணவர் சுரேஷ், அவர் சகோதரர் தாஸ் ஆகியோர்தான் முருகேசனைக் கொலை செய்திருக்கலாம் என்று அவர்கள் இருவரையும் தேடி வந்தனர். இந்த நிலையில், மேலகண்டமங்கலம் பகுதியில் பதுங்கியிருந்த சுரேஷ், தாஸ் இருவரையும் கோட்டூர் காவல்நிலைய ஆய்வாளர் சிவக்குமார் தலைமையிலான டீம் கைது செய்தது. இவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.
இது குறித்து போலீஸ் வட்டாரத்தில் விசாரித்தோம். “தன் மனைவி ராதிகாவின் தற்கொலைக்கு, தனது எதிர் வீட்டில் வசித்து வந்த முருகேசன்தான் காரணம் என சுரேஷ் மிகுந்த கோபத்திலும், மன உளைச்சலிலும் இருந்திருக்கிறார். இந்நிலையில், தன் மைத்துனர் தாஸோடு சேர்ந்து, முருகேசனைக் கொலை செய்ய திட்டமிட்டிருக்கிறார்.
சம்பவத்தன்று இரவு 8 மணியளவில் சுரேஷ், ராதிகாவின் தம்பி தாஸ் ஆகியோர் மேலகண்டமங்கலத்துக்கு வந்து நோட்டமிட்டுருக்கிறார்கள். தனது வீட்டிலிருந்து வெளியே வந்த முருகேசன் 9 மணியளவில், அந்தப் பகுதியில் உள்ள கடைக்கு நடந்து சென்று கொண்டிருந்திருக்கிறார். இதைக்கண்ட சுரேஷ், தாஸ் இருவரும் முருகேசனை வழிமறித்து தாங்கள் வைத்திருந்த அரிவாளால் அவர் தலையில் வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடியிருக்கிறார்கள். முன்விரோதத்தின் காரணமாகவே இந்த கொலை சம்பவம் நிகழ்ந்துள்ளது’’ எனத் தெரிவித்தனர்.
இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.