பிடதி -: பெங்களூரை ஒட்டியுள்ள ராம்நகர் மாவட்டம், பிடதியில் அவ்வப்போது தெரு நாய்களின் தொல்லை அதிகரித்துள்ளது.அடிக்கடி தெரு நாய்கள் சாலையில் சென்று வருவோரை கடிப்பதால் பலர் காயமடைந்துள்ளனர். வாகனங்களில் செல்வோரை துரத்தி செல்வதால், சில நேரங்களில் விபத்துகள் நடக்கின்றன.
அப்பகுதியை பலர், பிடதி டவுன்சபை அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு சென்றும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று குற்றஞ்சாட்டுகின்றனர்.நாய்களின் தொல்லையால், பள்ளி, கல்லுாரி மாணவர்கள், முதியோர், மாற்றுத்திறனாளிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
இது குறித்து பிடதியின் இந்திராநகரில் குடியிருக்கும் ஓய்வு பெற்ற ராணுவ வீரர் ஈஸ்வர ராஜு கூறியதாவது:பிடதி ரயில் நிலையம் அருகில் உள்ள மேம்பாலம் உட்பட சுற்று வட்டார பகுதிகளில் தெரு நாய்களின் தொல்லை தாங்க முடியவில்லை.ராணுவத்தில் இருந்த போது, என் வாகனத்துக்கு முன்னர் மூன்று தெரு நாய்கள் வந்ததால் பெரிய விபத்து நடந்து, ஊனமுற்றேன். சமீபத்தில் தெரு நாய் கடியால் 7,000 ரூபாய் சிகிச்சைக்கு செலவு செய்தேன்.நாய்க்கடியால் ஏற்படும் ரேபிஸ் நோயால் பலர் இறக்கின்றனர். நாய்களுக்கு சரியான முறையில் தடுப்பூசி செலுத்தப்படுவதில்லை.இவ்வாறு அவர் கூறினார்.
Advertisement