தமிழில் நல்ல படங்கள் எடுக்கும் பொழுது வெளிமாநிலங்களில் பெருமையடையும் என இயக்குநர் மணிரத்னம் தெரிவித்துள்ளார்.
சினிமா உருவாக்குதற்கு ஆகும் செலவை குறைக்கும் வகையில், Honey Flicks என்ற மென் பொருள் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சினிமாவில் உள்ள அனைத்து துறைகளையும் சரியான முறையில் திட்டமிடமுடியும் என கூறப்படுகிறது. மேலும் இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ‘விஷமகாரன்’ என்ற திரைப்படத்தை உருவாக்கியுள்ளனர். இதன் மூலம் 40% தொகை மிச்சப்படுத்தப்பட்டுள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
Honey Flicks மென்பொருளை இயக்குநர் மணிரத்னம் , தயாரிப்பாளர் சத்யஜோதி தியாகராஜன் மற்றும் நடிகர் பிரசாந்த் ஆகியோர் தொடங்கி வைத்தனர். அந்த நிகழ்வில் பேசிய மணிரத்னம், மென்பொருட்கள் இல்லாமல் உலகில் எந்த படமும் எடுக்கமுடியாது. தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இன்னும் எபெக்டிவாக திரைப்படம் எடுக்க முடியும் என தெரிவித்தார். அப்போது படத்தின் செலவை குறைக்க, தொழில்நுட்பங்களை பயன்படுத்தும் நிலையில், நடிகர்களின் சம்பளத்திற்கு அதிக தொகை செலவிடப்படுகிறது.
அதேபோல் மற்ற மொழி படங்கள் இங்கு வெற்றியடைகின்றன. தமிழ் படங்கள் மற்ற மாநிலங்களில் வெற்றியடைவதில் தற்போது தேக்கம் உள்ளதா என்ற புதிய தலைமுறையின் கேள்விகளுக்கு மணிரத்னம் பதிலளித்தார். அப்போது பேசிய அவர், “பிறமொழி படங்கள் தமிழ்நாட்டில் ஓடுவது புதிது கிடையாது. தமிழ்நாட்டில் இருந்து எடுக்கப்படும் படங்கள், இந்தி சினிமாவில் வெற்றி அடைந்து இருக்கின்றன. ஹாலிவுட் படங்களை தமிழில் டப் செய்து பார்க்கும் நாம், இப்போது கன்னட, தெலுங்கு சினிமாவை பார்க்கிறோம். இது நல்ல விஷயம் தான்.
தமிழ் படங்கள் மற்ற மாநிலங்களில் வெற்றியடைவதில் தேக்கம் உள்ளது என்றால், நல்ல படம் எடுக்கும்போது அந்த தேக்கம் குறையும்” என மணிரத்னம் தெரிவித்தார். அதேபோல் நடிகர்கள் சம்பளம் நாம் எவ்வளவு கொடுக்கிறோம் என்பதில் உள்ளது எனவும் அவர் கூறினார். தொடர்ந்து பேசிய மணிரத்னம், தமிழ் சினிமாவில் திறமைகளுக்கு பஞ்சம் கிடையாது. புதிய திறமைகள் பிறமொழிகளில் உருவாகி இருப்பது மகிழ்ச்சி எனவும் அவர் கூறினார். இந்த நிகழ்ச்சியில் பேசிய தயாரிப்பாளர் தியாகராஜன், பெரிய படங்கள், சின்ன படங்கள் என எதுவாக இருந்தாலும், கதை நல்லா இருந்தால் நிச்சயம் தியேட்டரில் படம் ஓடும் எனக் கூறினார்.