உதகை: நாட்டை துண்டாட நினைப்பவர்கள், நாட்டின் ஒருமைப்பாட்டை குலைக்கும் முயற்சி மேற்கொள்பவர்களுக்கு கருணை இல்லை என துணை வேந்தர்கள் மாநாட்டில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியுள்ளார்.
நீலகிரி மாவட்டம் உதகையில் உள்ள ராஜ்பவனில், தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் இருநாள் மாநாடு தொடங்கியது. ஆளுநரின் செயலர் ஆனந்த்ராவ் விஷ்ணு பாட்டில் வரவேற்றார். ‘வளர்ந்து வரும் புதிய உலக ஒழுங்கில் இந்தியாவின் பங்கு’, ‘2047-க்குள் இந்தியா உலகத் தலைவராக இருக்கும்’ ஆகிய தலைப்புகளில் இருநாள் மாநாட்டில் பல்கலைக்கழக மானியக் குழுவின் தலைவர் பேராசிரியர் எம்.ஜெகதேஷ் குமார் பேசும்போது, ”பல்கலைக்கழகங்கள் தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். தேசிய அளவில் 70% மாணவர்கள் கலை மற்றும் அறிவியல் கல்வியைப் பெறுகின்றனர். 30% மாணவர்கள் தொழில்நுட்பக் கல்வி பெறுகின்றனர். இவர்களுக்கு வேலைவாய்ப்பு உள்ளதா? வேலை வாய்ப்புகளை ஏற்படுத்த அவர்களின் திறனை மேம்படுத்த வேண்டும். அவர்கள் ஒரு பட்டப்படிப்பு மட்டுமல்லாமல் இரண்டு அல்ல அதற்குமேல் பட்டப்படிப்பு டிஜிட்டல் தளத்தில் மேற்கொள்ள பல்கலைக்கழகங்கள் வாய்ப்பு ஏற்படுத்த வேண்டும்” என்றார்.
மாநாட்டைத் தொடங்கி வைத்து ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியதாவது, “இந்தியாவில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு பல்வேறு பிரச்சினைகள் இருந்து வந்தன. ஜம்மு-காஷ்மீர் பிரிவினைவாத சக்திகளால் பல்வேறு பிரச்சினைகளில் இருந்து வந்தது. தற்போது அங்கு அமைதி நிலை திரும்பியுள்ளது. ஏராளமான சுற்றுலாப் பயணிகள் ஜம்மு-காஷ்மீருக்கு சுதந்திரமாக வந்து செல்லத் தொடங்கியுள்ளனர். அதேபோல் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வட கிழக்கு மாநிலங்களில் பல்வேறு பிரச்சினைகள் இருந்து வந்தன. மாவோயிஸ்டுகளின் பிரச்சினை அதிகமாக இருந்தது. ஆனால், அரசின் துரித நடவடிக்கையால் தற்போது மாவோயிஸ்ட்கள் பிரச்சினை வெகுவாகக் குறைந்துள்ளது. நாட்டின் ஒருமைப்பாடு மற்றும் நாட்டை துண்டாடும் சக்திகளுக்கு அரசிடம் கருணை கிடையாது. இது துல்லிய தாக்குதலின் மூலம் உணர்த்தப்பட்டுள்ளது. நாடு ஒரே குடும்பம். இங்கு எந்த வித சமூக ஏற்றத் தாழ்வுகளும் கிடையாது.
அனைத்து குடிமக்களும் அமைதியாக வாழ இந்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்தியாவில் சுதந்திரத்திற்கு முந்தைய கல்வி முறை அப்போதைய சூழலுக்கு ஏற்றவாறு இருந்தது. தற்போது நாடு வளர்ந்து வரும் சூழ்நிலைக்கு ஏற்ப கல்வி முறையில் மாற்றங்களை கொண்டு வர வேண்டும். இந்தியா வரும் 2047ல் சர்வதேச அளவில் முன்னிலை வகிக்க கல்வி முறைகளில் மாற்றங்கள் தேவை. அதற்கான திட்டமிடுதலில் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் ஈடுபட வேண்டும்.
கடந்த 10 ஆண்டுகளில் இந்தியா பல்வேறு துறைகளிலும் முன்னேற்றம் அடைந்துள்ளது. நம்மை அச்சுறுத்தி வந்த நாடுகள் கூட தற்போது நம்மைக் கண்டு அஞ்சும் நிலை உருவாகியுள்ளது. இதற்கு உதாரணம், உக்ரைன் – ரஷ்யா போரில் எந்த நாட்டிற்கும் இந்தியா அடிபணியாமல் சுதந்திரமாக முடிவை எடுத்தது.
இந்திய அளவில் 70 சதவீத மாணவர்கள் கலை அறிவியல் பாடங்களையே படித்து வருகின்றனர். மாணவர்கள் கல்லூரி படிப்பை முடித்து வெளிவரும்போது திறமையானவர்களாக இருக்க வேண்டும். மாணவர்களிடத்தில் பன்முக திறமையை உருவாக்க பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பாடுபட வேண்டும். இந்தியாவை முதன்மை நாடாக கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கு பல்கலைக்கழகங்கள் பன்முக திறன் கொண்ட மாணவர்களை உருவாக்குவது கடமை. அதற்கான வாய்ப்புகளை பல்கலைக்கழகங்கள் கட்டமைக்க வேண்டும்” என்றார்.
நிகழ்ச்சியில், ஜோஹோ கார்ப்பரேஷன் முதன்மை செயல் அதிகாரி ஸ்ரீதர் வேம்பு சிறப்புரையாற்றினார். தமிழகத்தில் உள்ள அனைத்து மாநிலப் பல்கலைக்கழகங்கள், மத்தியப் பல்கலைக்கழகங்கள் மற்றும் தனியார் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள், பேராசிரியர்கள் மற்றும் இணைப் பேராசிரியர்களும் மாநாட்டில் பங்கேற்றனர்.