புதுடெல்லி: நாடுமுழுவதும் நிலக்கரி பற்றாக்குறை ஏற்பட்டுள்ள நிலையில் அனல்மின் நிலையங்களுக்கு நிலக்கரி விநியோகத்தை தொய்வின்றி தொடர்ந்து வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், ஒரு வார காலத்திற்குள் 10%-க்கும் அதிக அளவில் நிலக்கரி விநியோக செய்யப்பட்டுள்ளதாகவும் இந்திய ரயில்வே தெரிவித்துள்ளது.
கரோனா பாதிப்பிலிருந்து பொருளாதாரம் மீண்டு வருவதால் இந்தியாவின் மின்சாரத் தேவை வெகுவாக அதிகரித்துள்ளது. இதனால் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு அனல் மின்நிலையங்களில் மின்சாரம் தயாரிக்க தேவைப்படும் மூலப்பொருளான நிலக்கரிக்கு உலகம் முழுவதுமே தேவை அதிகரித்து பற்றாக்குறை ஏற்பட்டது. இந்தநிலையில் மீண்டும் அதுபோன்ற சூழல் ஏற்பட்டுள்ளது. உக்ரைன்- ரஷ்ய போருக்குப் பிறகு நிலக்கரி உட்பட எரிபொருளின் விலையும் கடுமையாக உயர்ந்து வருகிறது. நிலக்கரி விலையும் உயர்ந்துள்ளது. தேவையான நிலக்கரியும் கிடைக்கவில்லை.
அதேசமயம் கோடைகாலம் தொடங்கியுள்ளதால் மின்தேவை கணிசமாக உயர்ந்துள்ளது. இந்தியாவின் மின்சாரத் தேவை தற்போது 15சதவீதத்திற்கு மேல் அதிகரித்துள்ளது. ஆனால் மின்சரம் தயாரிக்க அனல் மின் உற்பத்தி நிலையங்களில் நிலக்கரி இல்லை. இதனால் நாட்டின் சில பகுதிகளில் ஒரு சில மணிநேரம் மின்வெட்டும் அமல்படுத்தப்பட்டது. இதனையைடுத்து மின்சார உற்பத்திக்கு போதுமான நிலக்கரியை இறக்குமதி செய்யவும், அதனை விரைவாக அனல் மின் நிலையங்களுக்கு கொண்டு சேர்க்கவும் மத்திய அரசு விரைவாக நடவடிக்கை எடுத்து வருகிறது.
இதுகுறித்து இந்திய ரயில்வே தெரிவித்துள்ளதாவது:
மின் உற்பத்தி நிலையங்களுக்கு நிலக்கரியை விரைவாக வழங்குவதை உறுதி செய்வதற்காக, நிலக்கரி போக்குவரத்தை அதிகரிக்க கூடுதல் ரயில்கள் மற்றும் பெட்டிகளுக்கான நடவடிக்கைகளை இந்திய ரயில்வே எடுத்துள்ளது.
நிலக்கரி போக்குவரத்தை இந்திய ரயில்வே அதிகப்படுத்தியுள்ளதன் விளைவாக செப்டம்பர் 2021 முதல் மார்ச் 2022 வரை 32% அதிக நிலக்கரி சரக்கு எடுத்து செல்லப்பட்டுள்ளது. ஏப்ரல் 2022-க்குப் பிறகு சரக்கு போக்குவரத்தில் 10% அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.
2021-22-ம் ஆண்டில் இந்திய ரயில்வே மூலம் நிலக்கரி போக்குவரத்து சாதனை அளவில் 111 மில்லியன் டன்கள் அதிகரித்து, 653 மில்லியன் டன் நிலக்கரி எனும் அளவை எட்டியுள்ளது. முந்தைய ஆண்டில் இது 542 மில்லியன் டன்னாக இருந்த நிலையில் 20.4% வளர்ச்சி எட்டப்பட்டுள்ளது.
மேலும், செப்டம்பர் 2021 முதல் மார்ச் 2022 வரையிலான காலகட்டத்தில் மின் துறைக்கு நிலக்கரி எடுத்து செல்வது வெறும் 2 காலாண்டுகளில் 32% அதிகரித்துள்ளது.
மின் துறைக்கு நிலக்கரியை எடுத்து செல்வதற்கு முன்னுரிமை அளிக்க ஏப்ரல் 2022-ல் இந்திய ரயில்வே பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. ஒரு வார காலத்திற்குள் 10%-க்கும் அதிக அளவில் நிலக்கரி விநியோகத்தை அதிகரிக்க இது வழிவகுத்தது.
இந்திய ரயில்வே மேற்கொண்ட பல்வேறு நடவடிக்கைகளால் இந்த முன்னேற்றம் சாத்தியமாகியுள்ளது.