காஞ்சிபுரம்: நீடித்த, நிலையான வளர்ச்சியை எட்டுவதன் மூலம் தமிழக கிராம ஊராட்சிகள் தேசிய அளவில் மற்ற மாநிலங்களுக்கு முன்மாதிரியாக விளங்கும் என்று காஞ்சிபுரம் மாவட்டம் செங்காடு கிராமத்தில் நடந்த சிறப்பு கிராம சபை கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.
தேசிய ஊராட்சிகள் (பஞ்சாயத்து ராஜ்) தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும் ‘ஊரக வளர்ச்சிமற்றும் நீடித்த வளர்ச்சி இலக்கு’ என்ற தலைப்பில் சிறப்பு கிராமசபைக் கூட்டம் நேற்று நடந்தது. காஞ்சிபுரம் மாவட்டம் பெரும்புதூர் ஒன்றியத்தில் உள்ள செங்காடு கிராமத்தில் நடந்த சிறப்பு கிராம சபை கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்றார். அவர் பேசியதாவது: “நீடித்த வளர்ச்சி இலக்குகளை அடைய, கிராம ஊராட்சிகள் தகுந்தநடவடிக்கைகளை மேற்கொண்டு, திராவிட மாடல் ஆட்சி இதுதான் என்பதை உலகுக்கு உணர்த்தப் போகிறோம். நீடித்த, நிலையான வளர்ச்சியை எட்டுவதன் மூலம் இந்த கிராம ஊராட்சிகள் தேசிய அளவில் மற்ற மாநிலங்களுக்கு முன்மாதிரியாக விளங்கும்.
கிராம ஊராட்சிகளை ஊக்குவிக்க, ‘முன்மாதிரி கிராம விருது’, ‘உத்தமர் காந்தி விருது’, அனைத்து மாவட்டங்களிலும் சிறப்பாக செயல்படுகிற தொழில் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு விருது என அரசு பல்வேறு விருதுகளை அறிவித்து வருகிறது.
மத்திய, மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. இவற்றை திறம்பட ஒருங்கிணைத்து, கடைக்கோடி மக்களிடம் கொண்டுபோய் சேர்க்க உள்ளாட்சி அமைப்புகளால்தான் முடியும். எதிர்க்கட்சியை சேர்ந்தவர் ஊராட்சித் தலைவராக இருந்தாலும், அந்த ஊராட்சிகளுக்கு தேவையான அனைத்து தேவைகள், உதவிகளும் செய்து தரப்படும்.
குடிநீர் பிரச்சினை, ரேஷன் கடை பிரச்சினை, மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு வரக்கூடிய இடையூறுகள், 100 நாள் வேலை திட்டத்தை 150 நாட்களாக மாற்றுவது,சுகாதார நிலையம் அமைப்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்துள்ளீர்கள். இதை நிறைவேற்ற விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்”. இவ்வாறு முதல்வர் கூறினார்.
முன்னதாக, பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டறிந்து, அவற்றை நிறைவேற்றுவதாக முதல்வர் உறுதியளித்தார்.
பின்னர், ஊராட்சி மன்ற அலுவலகம் சென்ற முதல்வர் அங்கு கிராம நடவடிக்கைகள் குறித்து ஊராட்சி தலைவர், அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
இந்த நிகழ்ச்சியில் குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், பெரும்புதூர் நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு,பெரும்புதூர் எம்எல்ஏ செல்வப்பெருந்தகை, ஊரக வளர்ச்சி, ஊராட்சி துறை செயலர் பி.அமுதா,துறை இயக்குநர் பிரவீன் நாயர்,காஞ்சிபுரம் ஆட்சியர் மா.ஆர்த்தி , மாவட்ட ஊராட்சிக் குழு தலைவர் படப்பை மனோகரன், ஊராட்சி மன்றத் தலைவர் செஞ்சுராணி கவாஸ்கர், துணைத் தலைவர் டி.சுதாகர் பங்கேற்றனர்.